சவாலை சந்திக்க தயார்: யுவராஜ்

இங்கிலாந்து வீரர்களின் சவாலை சந்தித்து, டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிப்பதே முக்கிய குறிக்கோள்,'' என, இந்திய வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து செல்ல உள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட, டெஸ்ட் தொடரில் (ஜூலை 21-ஆக.,18) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் ஜூலை 21ம் தேதி, லார்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது. இதற்கான இந்திய அணியில் நீண்ட நாட்களுக்குப் பின் இடம் பெற்றார் யுவராஜ் சிங். இதுகுறித்து இவர் கூறியது:

இங்கிலாந்து அணி மிகச்சிறந்த அணி. சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான வெற்றி பெற்று வருகின்றனர். இந்நிலையில் அவர்களை சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது கடினமானது. ஆனால், இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த பலர் இடம் பெற்றுள்ளனர்.

சமீபகாலமாக, வெளிநாடுகளிலும் இந்திய அணி நல்ல வெற்றிகளை பெறத் துவங்கியுள்ளது. இதனால் இரு அணிகள் இடையிலான தொடர், சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

என்னைப் பொறுத்தவரையில் டெஸ்ட் விளையாடுவதும் கிரிக்கெட் தான். இதற்கான அணியில் நிரந்தர இடம் பிடிக்கவேண்டும் என்பதே விருப்பம். இது அவ்வளவு எளிதல்ல என்பது நன்கு தெரியும்.

தற்போதைய இங்கிலாந்து தொடர், எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சவாலான தொடர். ஆனால் ஒவ்வொரு சவாலையும், ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு சாதிக்க முயற்சிப்பேன்.

இங்கிலாந்து அணியின் பீட்டர்சனைப் பற்றி நன்கு தெரியும். அவருக்கு பந்து வீச மிகவும் ஆர்வமாக உள்ளேன். இதன் மூலம், பீட்டர்சனையும், மற்ற வீரர்களையும் அவுட்டாக்கினால், மிகவும் பெருமைப்படுவேன்.

இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.

0 comments:

Post a Comment