இன்று இந்திய அணி அறிவிப்பு - சந்தேகத்தில் சேவக்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணித் தேர்வு, இன்று சென்னையில் நடக்கிறது. காயம் காரணமாக துவக்க வீரர் சேவக் இடம் பெறுவது சந்தேகம்.

இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட, டெஸ்ட் தொடரில் (ஜூலை 21-ஆக.,18) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில், வரும் ஜூலை 21ம் தேதி துவங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணி தேர்வு இன்று சென்னையில் நடக்கிறது.

ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக் குழுவினர், வெஸ்ட் இண்டீசில் உள்ள கேப்டன் தோனி, பயிற்சியாளர் பிளட்சருடன் "வீடியோ கான்பரன்சிங்' முறையில் விவாதித்து அணியை தேர்வு செய்வர்.

வெஸ்ட்இண்டீஸ் தொடரில் இடம் பெறாத சச்சின், ஜாகிர் கான், காம்பிர், போன்ற முன்னணி வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்புவர் எனத்தெரிகிறது. ஆனால் அதிரடி துவக்க வீரர் சேவக்கின், காயத்தின் தன்மை குறித்து உறுதியான தகவல் எதுவும் வராததால், இவரது தேர்வு கேள்விக்குறியாக உள்ளது.

தேர்வுக் குழுவைச் சேர்ந்த பெயர் குறிப்பிடாத ஒருவர் கூறுகையில்,"" காம்பிர், ஜாகிர் கான் உடற்தகுதி குறித்து தான் தகவல் வந்துள்ளது. சேவக் காயம் குறித்து இதுவரை எவ்வித செய்தியும் எங்களுக்கு வரவில்லை. காம்பிர், சேவக்கிற்கு பதில் துவக்க வீரர்களாக அபினவ் முகுந்த், முரளி விஜய் தான் எங்களுடைய தேர்வு. இவர்கள் சிறப்பாக விளையாடாதது ஏமாற்றம் தான்,'' என்றார்.

இதை பார்க்கும் போது, முதல் டெஸ்டில் சேவக் இடம் பெறுவது சந்தேகம். வரும் ஜூலை 29ல் நாட்டிங்காமில் துவங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஒருவேளை சேவக் பங்கேற்கலாம். சேவக் இல்லாத நிலையில் காம்பிருடன் துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு, மீண்டும் முரளி விஜய்க்கு கிடைக்கலாம்.


ரெய்னா உறுதி:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்டில், அடுத்தடுத்து அரை சதம் அடித்துள்ள ரெய்னாவுக்கு இங்கிலாந்து தொடரில் இடம் உறுதி. மற்றொரு "மிடில் ஆர்டர்' இடத்துக்கு விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, யுவராஜ் சிங் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.


இஷாந்த் "ஓ.கே':

பவுலிங்கை பொறுத்தவரையில் ஜாகிர் கானுடன், பிரவீண் குமார், இஷாந்த் சர்மா தேர்வாகலாம். நான்காவது வேகப்பந்து வீச்சாளர் இடத்துக்கு ஸ்ரீசாந்த், அபிமன்யு மிதுன் இடையே போட்டி காணப்படுகிறது. சுழலில் ஹர்பஜன், அமித் மிஸ்ரா இடம் பெறலாம்.

0 comments:

Post a Comment