சச்சின் காத்திருக்க வேண்டும் -அப்ரிதி

உலக கோப்பை தொடருக்குப்பின் தான், சச்சின் 100வது சதம் அடிக்க முடியும். அதுவரை அவர் காத்திருக்க வேண்டும். ஏனெனில், அரையிறுதியில் யாரையும் பெரிய ஸ்கோர் எடுக்க விடமாட்டோம்,'' என, பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி மிரட்டல் விடுத்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட்டில், வரும் 30ம் தேதி நடக்கும், இரண்டாவது அரையிறுதி போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதுகுறித்து அப்ரிதி கூறியது:

வழக்கமாக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி என்றால் அதிக பரபரப்பு இருக்கும்.

இம்முறை இந்திய அணி சொந்த மண்ணில் பங்கேற்பதால், அவர்களுக்குத் தான் கூடுதல் நெருக்கடி. இந்த அரையிறுதி போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறுவோம் என்று தான் நினைக்கின்றன.

இந்த போட்டியை அனைத்து வீரர்களும், ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போதுள்ள பெரும்பாலான இளம் வீரர்கள் இந்திய அணிக்கு எதிராக விளையாடியது இல்லை. ஆனால் இது ஒரு பிரச்னையே இல்லை. ஏனெனில், இந்த வீரர்கள் நெருக்கடியை சிறப்பாக கையாளுவார்கள் என்று நம்பிக்கை உள்ளது.

இவர்களது சிறப்பான "பார்மை' கொண்டு, எவ்வித நெருக்கடிக்கும் இடம் தராமல், கவனமாக விளையாடி, இந்திய அணியை தோற்கடிப்போம்.

தவிர, இந்த போட்டியில் சச்சின் தனது 100வது சதம் அடிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். அவர் இந்த சாதனையை உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் தான் எட்ட முடியும். ஏனெனில், எங்களுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் எந்த வீரரையும் அதிக ஸ்கோர் எடுக்க விடமாட்டோம். இதனால் சச்சின் காத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அப்ரிதி தெரிவித்தார்.

0 comments:

Post a Comment