நீண்ட கால கனவு நிறைவேறியது

உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், கடைசி வரை களத்தில் இருந்து வீழ்த்த வேண்டும் என்ற, எனது நீண்ட கால கனவு நிறைவேறியது, என, இந்திய வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய துணைக்கண்டத்தில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் இரண்டாவது காலிறுதி போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில் "ஆல் ரவுண்டராக அசத்திய யுவராஜ் சிங், ஆட்ட நாயகனாக ஜொலித்தார்.

இதுகுறித்து யுவராஜ் சிங் கூறியது:

உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும். இந்த போட்டியில் நான் கடைசி வரைக்கும் களத்தில் இருக்க வேண்டும் என, கடந்த ஒரு ஆண்டாகவே கனவு கண்டேன். இப்போதைய வெற்றியின் மூலம், என்னுடைய நீண்ட கால கனவு நிறைவேறியுள்ளது.

இந்த போட்டியின் போது, உணர்ச்சியை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில் ஒரு சிறிய தவறு செய்திருந்தாலும், உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேற வேண்டியது இருந்திருக்கும். இதனால் பந்துகளை கவனமாக கணித்து, அந்தரத்தில் தூக்கி அடிக்காதவாறு எச்சரிக்கையுடன் விளையாடினேன்.


காம்பிரிடம் மன்னிப்பு:

காம்பிருடன் இணைந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அவுட் துரதிருஷ்டவசமாக "ரன் அவுட் ஆனார். இது எனது தவறுதான். அவர் கூறியதை சரியாக கவனிக்கவில்லை. இதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். காம்பிருக்குப் பின், தோனியுடன் சேர்ந்து நல்ல "பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று நினைத்தேன்.


அணியின் வெற்றி:

இந்நிலையில் அவர் ஆட்டமிழந்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பின் ரெய்னா வந்ததும், எப்படியும் 20 முதல் 30 ரன்கள் இணைந்து சேர்க்க வேண்டும். இதைக்கடந்ததும், அடுத்து அதிக நம்பிக்கை ஏற்பட்டது. போட்டியில் நான் ஆட்டநாயகன் விருது வென்றாலும், இந்த வெற்றி தனிப்பட்ட ஒருவரால் கிடைத்தது அல்ல. இது ஒட்டுமொத்த அணிக்கு கிடைத்த வெற்றி.


தற்போது "ரிலாக்ஸ்:

அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் எனது மற்றொரு கனவு நிறைவேறுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியதைப் போல, பாகிஸ்தானுக்கு எதிராகவும் விளையாட முயற்சிப்போம்.

எங்களைப் பற்றி அவர்களுக்கு நன்கு தெரியும், அதேபோல அவர்களைப் பற்றி எங்களுக்கும் தெரியும். இரு அணிகளும் சமபலத்தில் உள்ளது. மற்றபடி, அரையிறுதி குறித்து இப்போதைக்கு அதிகம் பேச விரும்பவில்லை. மிகுந்த நெருக்கடியான நிலையில் இப்போது வெற்றி பெற்றோம். இதனால் சற்று "ரிலாக்சாகி விட்டு, பின் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து திட்டமிட உள்ளோம்.

இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.


யுவராஜ் சிங் அபாரம்

உலக கோப்பை தொடரில் 300 ரன்களும் 10 விக்கெட்டும் எடுத்து அசத்திய இரண்டாவது இந்திய "ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் ஆவார். இதற்கு முன் கபில் தேவ் 1983 உலக கோப்பை போட்டிகளில் 303 ரன்களும் 12 விக்கெட்டும் எடுத்து இருந்தார். இவர்கள் தவிர, இலங்கையில் ஜெயசூர்யா, ஜிம்பாப்வேயின் நெயில் ஜான்சன் இச்சாதனை படைத்துள்ளனர்.

* ஒருநாள் போட்டிகளில் 8000 ரன்களை கடந்த ஐந்தாவது இந்திய வீரர் யுவராஜ் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் சச்சின், கங்குலி, டிராவிட், முகமது அசார் இந்த இலக்கை எட்டியுள்ளனர்.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிராக யுவராஜ் சிங் சிறந்த பந்து வீச்சை (2/44) பதிவு செய்தார்.

* உலக கோப்பை தொடரில் இவர் இதுவரை 11 விக்கெட் வீழ்த்தியுள்ளார். எந்த ஒரு தொடரில் இவர் இப்படி அதிக விக்கெட் கைப்பற்றுவது இதுவே முதன் முறை.


----

இந்தியா அதிகம்

நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 261 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி எடுத்து வெற்றி பெற்றது. இது உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் இரண்டாவது அதிகபட்ச "சேசிங் ஆகும். இதற்கு முன் கடந்த 2003 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா, 276 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றிருந்தது.
---

இந்தியா கோப்பை வெல்லும்: பாண்டிங்

இந்திய அணியின் வெற்றி குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாண்டிங் கூறுகையில்,"" இந்திய அணி ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடினர். இந்த வெற்றிக்கு அவர்களுக்கு தகுதியுள்ளது. இவர்களை தோல்வியடையச் செய்வது என்பது மிகவும் கடினம். அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி, எப்படியும் <உலக கோப்பை வெல்வார்கள். ஏனெனில் சிறப்பாக பேட்டிங் வரிசையை கொண்ட அணியாக இந்தியா உள்ளது, என்றார்.
---

யார் அந்த "ஸ்பெஷல் நபர்?

உலககோப்பை தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் யுவராஜ் சிங். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" இம்முறை மிகவும் "ஸ்பெஷலான ஒரு நபருக்காக விளையாடி வருகிறேன். போட்டியில் மோசமான சூழ்நிலை ஏற்படும் போதெல்லாம், அவரை நினைத்துக் கொள்வேன்.

உடனே நிலைமை சாதகமாக மாறி விடும், என்றார். இந்த "ஸ்பெஷல் நபர் யார் என்பதை தெரிவிக்க, யுவராஜ் மறுத்துவிட்டார். இந்தியா பைனலுக்கு முன்னேறும் பட்சத்தில், அவரைப்பற்றிய ரகசியத்தை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment