கிரிக்கெட் புரட்சியில் அனில் கும்ளே

கர்நாடக கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் அனில் கும்ளே போட்டியிட இருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது வருகை, கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல்வாதிகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கர்நாடக கிரிக்கெட் சங்க தலைவராக தற்போது மைசூர் மன்னரும் அரசியல் பிரமுகருமான ஸ்ரீகாந்ததத்தா உடையார் உள்ளார். செயலராக முன்னாள் வீரர் பிரிஜேஷ் படேல் இருக்கிறார். இவர்கள், தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர்.


இந்தச் சூழலில் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. இதில், உடையார் செல்வாக்கை முறியடிக்க பிரிஜேஷ் படேல் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து கர்நாடகாவை சேர்ந்த மும்மூர்த்திகளான கும்ளே, வெங்கடேஷ் பிரசாத், ஸ்ரீநாத் ஆகியோரை களமிறக்குகிறார். இம்முறை பிரிஜேஷ் போட்டியிடவில்லை.


இந்திய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் கும்ளே, தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். துணை தலைவர் பதவிக்கு வெங்கடேஷ் பிரசாத் மற்றும் செயலர் பொறுப்புக்கு ஸ்ரீநாத் போட்டியிடுகின்றனர். மற்றொரு கர்நாடக வீரரான டிராவிட் தற்போது விளையாடி கொண்டிருக்கிறார். இவருக்கும் நிர்வாகத்தில் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. கடந்த முறை நடந்த தேர்தலில் முன்னாள் வீரரான குண்டப்பா விஸ்வநாத்தை, உடையார் வீழ்த்தினார். எனவே, இவரை சமாளிப்பது எளிதான காரியம் அல்ல.


தோல்வி வரலாறு:கிரிக்கெட் சங்க தேர்தலில் முன்னாள் வீரர்கள் போட்டியிட்டு தோல்வி அடைந்த வரலாறு உண்டு. கடந்த 2000ல் அரியானா கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கபில் தேவ், ரன்பிர் சிங் மகேந்திராவிடம் தோல்வி அடைந்தார். 2001ல் நடந்த மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர், சரத் பவாரிடம் வீழ்ந்தார். எனவே, கும்ளே மிகவும் சாதுர்யமாக காய் நகர்த்த வேண்டும்.


இவரை போன்ற சிறந்த வீரர்கள் கிரிக்கெட் நிர்வாகத்தில் காலடி எடுத்து வைப்பது, நாட்டின் மற்ற கிரிக்கெட் சங்கத்திலும் புரட்சியை ஏற்படுத்தும். அரசியல்வாதிகளுக்கு விடை கொடுத்து விட்டு, கிரிக்கெட் வீரர்களே நிர்வாகத்திலும் பங்கு வகிக்க வழி வகுக்கும்.


இரு பதவிகள்:தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக கும்ளே உள்ளார். இதே போல ஐ.சி.சி., "மேட்ச் ரெப்ரி'யாக ஸ்ரீநாத் உள்ளார். இப்படி முக்கிய பணிகளில் இருக்கும் போது, கர்நாட கிரிக்கெட்டின் முன்னேற்றத்துக்கு இவர்களால் போதிய நேரம் ஒதுக்க முடியாது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து கும்ளே கூறியது:


கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற நிலையில், கிரிக்கெட் நிர்வாகத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். நாட்டின் "நம்பர்-1' அணியாக கர்நாடகாவை மாற்ற வேண்டும். இங்கிருந்து நிறைய வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்கு அடிமட்ட அளவில் நிறைய மாற்றங்களை செய்வது அவசியம். பள்ளி மற்றும் கிளப் கிரிக்கெட்டின் கட்டமைப்பில் மாற்றம் செய்ய வேண்டும்.


என்னை பொறுத்தவரை கிரிக்கெட்டுக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறேன். தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருப்பதால், கர்நாடக கிரிக்கெட் சங்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்க முடியாது என்பது தவறு. இரண்டு பொறுப்புகளையும் கவனிக்க போதிய நேரம் இருப்பதால் தான், தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறேன்.

ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே கிரிக்கெட் நிர்வாகத்தில் நுழைய முடியும். இதன் அடிப்படையில் தான் தேர்தலில் டிராவிட் போட்டியிடவில்லை. இம்முறை நடக்கும் தேர்தலில் இரு கோஷ்டிகள் மோதவில்லை. அனைவரும் கர்நாடக கிரிக்கெட்டின் முன்னேற்றத்துக்காக தான் பாடுபடுகிறோம்.
இவ்வாறு கும்ளே கூறினார்.

0 comments:

Post a Comment