இளம் இந்திய அணி சாதிக்குமா?
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இதில், காம்பிர் தலைமையிலான இளம் இந்திய அணி, அசத்தல் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் போட்டி இன்று கவுகாத்தி, நேரு மைதானத்தில் நடக்கிறது. இம்முறை இந்திய அணியில் சச்சின், சேவக், தோனி, ஜாகிர் கான், ஹர்பஜன் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், புதிய கேப்டன் காம்பிருடன் தமிழகத்தின் முரளி விஜய் இணைந்து, பொறுப்பான துவக்கம் தர வேண்டும். மிடில் ஆர்டரில் ரெய்னா, விராத் கோஹ்லி, யுவராஜ் சிங் ஆகியோர் தான் இத்தொடர் முழுவதிலும் இந்திய அணிக்கு கைகொடுக்க வேண்டும். யூசுப் பதான், ஆல் -ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா, விக்கெட் கீப்பர் சகா போன்றவர்கள் நம்பிக்கை தருகின்றனர்.
அஷ்வின் வருகை:
வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் ஆஷிஸ் நெஹ்ரா, ஸ்ரீசாந்த், முனாப் படேல், வினய் குமார் உள்ளனர். சுழற்பந்து வீச்சிற்கு ஐ.பி.எல்., தொடர்களில் நம்பிக்கை அளித்த அஷ்வின், அணிக்கு உதவுவார் என்று தெரிகிறது.
மெக்கலம் பலம்:
நியூசிலாந்து அணியின் பேட்டிங்கிற்கு முதுகெலும்பாக இருப்பவர் பிரண்டன் மெக்கலம் தான். டெஸ்ட் தொடரில் இரட்டைசதம் அடித்துள்ள இவர், ஒருநாள் தொடரில் சாதிக்க காத்திருக்கிறார். இவருடன் அனுபவம் வாய்ந்த ஸ்காட் ஸ்டைரிஸ், ரோஸ் டெய்லர் ஆகியோரும் உள்ளனர்.
தவிர, கப்டில், எலியாட், ஹாப்கின்ஸ், நாதன் மெக்கலம் இளம் வில்லியம்சன் இவர்களுடன் கேப்டன் வெட்டோரியும் தன்பங்கிற்கு ரன் குவிக்கவுள்ளார். காயம் காரணமாக ஜெசி ரைடர், ஒருநாள் தொடரில் இருந்து விலகியது அணிக்கு பின்னடைவு தான்.
பவுலிங்கில் கைல் மில்ஸ், பிராங்க்ளின், டேரல் டபி மற்றும் ஆன்டி மெக்கே ஆகியோர் கைகொடுக்கலாம். சுழலில் வெட்டோரியுடன் ஆல்- ரவுண்டர் ஸ்டைரிஸ், நாதன் மெக்கலமும் ரன்வேகத்தை குறைக்க உதவலாம்.
சமீபத்தில் வங்கதேசத்து எதிரான ஒருநாள் தொடரில் (0-4) மோசமான தோல்வியடைந்த நியூசிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற முயற்சிக்கலாம். அதேநேரம், இந்திய அணியின் இளம் வீரர்கள், தங்களது திறமையை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால், ரசிகர்கள் கடும் போட்டியை எதிர்பார்க்கலாம்.
டிக்கெட் விற்பனை மந்தம்
கவுகாத்தி நேரு மைதானத்தில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மந்தமாக உள்ளது. விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட 16,000 டிக்கெட்டுகளில், 6 ஆயிரம் மட்டுமே விற்றுள்ளதாக தெரிகிறது. மைதானத்தில் மாலை 3.45க்கு வெளிச்சம் குறைந்து விடும் என்பதால், மழை காரணமாக போட்டி 100 ஓவர்கள் முழுமையாக நடக்காது என்பதால், ரசிகர்கள் ஆர்மில்லாமல் இருப்பதாக தெரிகிறது.
தரமான ஆடுகளம்
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கு நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து, 27 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து திணறி, பின் தோல்வியடைந்தது. இதுகுறித்து ஆடுகள தயாரிப்பாளர் சுனில் பருவா கூறுகையில்,"" கடந்த போட்டியின் முடிவால், ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்தேன். அதுகுறித்து மீண்டும் பேச விரும்பவில்லை. ஆனால், தற்போது சிறப்பான ஆடுகளத்தை தந்துள்ளேன்,'' என்றார்.
மழை வாய்ப்பு
முதல் ஒருநாள் போட்டி நடக்கும் கவுகாத்தியில், அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி, குறைந்தபட்சம் 15 டிகிரி செல்சியாக இருக்கும். இன்று மழை வருவதற்கு 30 சதவீதம் வாய்ப்புகள் உள்ளது.
இம்மைதானத்தில் இதுவரை...
* இந்திய அணி இங்கு பங்கேற்ற 11 போட்டிகளில், 5 ல் வெற்றி, 4ல் தொல்விடைந்துள்ளது. 2 போட்டிகள் ரத்துசெய்யப்பட்டது.
* பேட்டிங்கில் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிராக (2002), அதிகபட்சமாக 333?6 ரன்கள் எடுத்துள்ளது. குறைந்த அளவாக 135 ரன்களுக்கு (வெஸ்ட் இண்டீஸ், 1987) சுருண்டது.
வெற்றி அதிகம்
இந்தியா, நியூசிலாந்து அணிகள் இதுவரை 83 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 41, நியசிலாந்து 37 ல் வென்றுள்ளது. 5 போட்டிகளுக்கு முடிவு கிடைக்கவில்லை.
இளம் வீரர்கள் அசத்துவார்கள்: காம்பிர்
இன்றைய போட்டியில் இளம் வீரர்கள் தங்களது திறமையை நிரூபிப்பார்கள் என்று நம்புவதாக கேப்டன் காம்பிர் தெரிவித்தார். இதுகுறித்து காம்பிர் கூறியது:
அணியில் உள்ள பல இளம் வீரர்கள், சர்வதேச அனுபவம் பெற்றவர்கள். உலக கோப்பை தொடருக்கு முன்பு நடக்கும் கடைசி ஐந்து போட்டிகள் என்பதால், தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். இதனால் எங்கள் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பவுலிங்கில் ஜாகிர் கான் இல்லையென்றாலும், 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்ற ஆஷிஸ் நெக்ரா மற்றும் முனாப் படேல், அஷ்வின் போன்ற சிறப்பான வீரர்கள் உள்ளனர். யுவராஜ் சிங்கை பொறுத்தவரையில், என்ன செய்யவேண்டும் என்பது அவருக்கு தெரியும். அவர் ஒரு சிறந்த "மேட்ச் வின்னர்'. தவிர, சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தன்னை நிரூபித்துள்ளார்.
ஒருசில இன்னிங்சை வைத்து முடிவு எடுக்கக்கூடாது. இதுபோன்ற வீரர்களை வைத்து தான் இந்தியா டெஸ்டில் "நம்பர்-1', ஒருநாள் போட்டியில் "நம்பர்-2' இடத்தை பிடித்தது,'' என்றார்.
சந்தேகத்தில் மெக்கலம்
மூன்றாவது டெஸ்டில் இடுப்பு காயத்தால் அவதிப்பட்ட நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கலம், இன்னும் முழுமையாக குணமடையவில்லை. நேற்று மதியம் பயிற்சியின் போது இவரை காண முடியவில்லை. இதனால் இன்று இவர் களமிறங்குவது சந்தேகம் தான்.
இதுகுறித்து கேப்டன் வெட்டோரி கூறுகையில்,"" காயத்தால் அவதிப்படும் மெக்கலம் விளையாடுவார் என்றால், விக்கெட் கீப்பிங் பணியையும் சேர்த்து கவனிப்பார். இதுகுறித்து போட்டி துவங்கும் முன்தான் இறுதி முடிவெடுக்க முடியும். அதற்கு முன் எதுவும் கூறஇயலாது,'' என்றார்.
0 comments:
Post a Comment