ஏப். 8 ல் நான்காவது ஐ.பி.எல்., தொடர்

நான்காவது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப். 8 ம் தேதி முதல் மே.22 வரை இந்தியாவில் நடக்க உள்ளது. தவிர, இத்தொடருக்கான வீரர்கள் ஏலம், அடுத்த ஆண்டு ஜனவரி 8 மற்றும் 9 ம் தேதிகளில் மும்பையில் நடக்க உள்ளது. 

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) அமைப்பு கடந்த 2008 ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் "டுவென்டி-20' தொடர் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் இத்தொடரில் பங்கேற்று வந்தன. 

அடுத்த ஆண்டு நடக்க உள்ள 4 வது ஐ.பி.எல்., தொடரில் கொச்சி, புனே என இரண்டு அணிகள் புதிதாக இணைக்கப்பட்டன. இதனையடுத்து 10 அணிகள் பங்கேற்க விருந்தன. 

8 அணிகள்: ஆனால் உரிமையாளர்கள் சர்ச்சையில் சிக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் அதிரடியாக நீக்கப்பட்டன. இதனால் வழக்கம் போல 8 அணிகள் மட்டும், 4 வது ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் என ஐ.பி.எல்., நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. 

அரையிறுதியில் மாற்றம் :இத்தொடர் அடுத்த ஆண்டு ஏப். 8 முதல் மே. 22 வரை நடக்க உள்ளது. துவக்க விழா, ஏப். 7 ம் தேதி நடக்க உள்ளது. மொத்தம் 60 போட்டிகள் நடக்க உள்ளன. இந்த முறை அரையிறுதியில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

லீக் சுற்றின் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள், முதல் அரையிறுதியிலும், 3 மற்றும் 4 வது இடத்தை பெறும் அணிகள் 2 வது அரையிறுதியிலும் மோதும். முதல் அரையிறுதியில் வெற்றி பெறும் பெறும் அணி பைனலுக்கு முன்னேறும். தோல்வி பெறும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும். 

இந்த அணி, 2 வது அரையிறுதியில் வெற்றி பெறும் அணியுடன் மற்றொரு போட்டியில் போதும். இதில் வெற்றி பெறும் அணி 2 வது அணியாக பைனலுக்கு முன்னேறும். 

வீரர்கள் ஏலம்: கடந்த 2008 ம் ஆண்டு நடந்த முதல் ஐ.பி.எல்., தொடரின் போது, மூன்று ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ், ஏலத்தில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த ஒப்பந்தம், இந்த ஆண்டுடன் முடிவடைந்தது. 

இதனையடுத்து வீரர்களுக்கான புதிய ஏலம், அடுத்து ஆண்டு ஜனவரி மாதம் 8 மற்றும் 9 ம் தேதிகளில் மும்பையில் நடக்க உள்ளது. இதனால் முன்னணி வீரர்கள் பலர், அணி மாற அதிக வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. 

புதிய விதி :இதனை தவிர்க்க, ஐ.பி.எல்., நிர்வாகம் புதிய விதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் படி, தொடரில் விளையாட உள்ள 8 அணிகளும், 3 இந்திய வீரர்கள் உட்பட மொத்தம் 4 வீரர்களை தங்கள் அணியிலேயே வைத்துக் கொள்ளலாம். 

ஆனால் இதற்காக சுமார் 20 கோடி ரூபாயை ஏலத்தில் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஒவ்வொரு அணிகளும் ஏலத்தில் 40 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்த ஐ.பி.எல்., நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத் தக்கது. 

இறுதி கெடு: உரிமையாளர்கள் பிரச்னையை தீர்க்குமாறு கொச்சி அணிக்கு 30 நாள் நோட்டீஸ் அனுப்பி உள்ளது ஐ.பி.எல்., நிர்வாகம். இதற்கு வரும் 27 ம் தேதி தான் கடைசி நாள். அதற்குள் பிரச்னையை தீர்க்காவிடில், கொச்சி அணியின் உரிமம் ரத்து செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.

0 comments:

Post a Comment