உலக கோப்பை: சச்சினுக்கு கவுரவம்

உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடரின் விளம்பர தூதராக, இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நியமித்துள்ளது.

இந்தியா-இலங்கை-வங்கதேச நாடுகள் இணைந்து, அடுத்த ஆண்டு (பிப்.,19-ஏப்.,2) உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன. இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், இத்தொடருக்கான விளம்பர தூதராக இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நேற்று நியமனம் செய்தது.

இதுகுறித்து ஐ.சி.சி., தலைமை அதிகாரி ஹரூன் லார்கத் கூறுகையில், "" சச்சினை, வரும் 2011ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தூதராக நியமித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு, இவரை தவிர வேறு யாரும் பொறுத்தமானவர்களாக இருப்பார்கள் எனத் தெரியவில்லை.

இவர் கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமின்றி, அனைத்து விளையாட்டு நட்சத்திரங்களுக்கும் ரோல் மாடலாக விளங்குகிறார். இது இவரது சிறப்பம்சம்,'' என்றார்.

சொந்த மண் பெருமிதம்:


இது குறித்து மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கூறுகையில், ""அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடரை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். ஏனெனில் இதில் பங்கேற்பதன் மூலம், அதிக முறை உலக கோப்பை தொடரில் (6 முறை) விளையாடிய பெருமையை, முன்னாள் பாகிஸ்தான் வீரர் மியான்தத்துடன் பகிர்ந்து கொள்வேன்.

தவிர, இம்முறை உலக கோப்பை தொடர் இந்திய துணைக் கண்டங்களில் நடக்கிறது. சொந்த மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணிக்கு கோப்பை வென்று தர ஆவலோடு உள்ளேன். சொந்த மண்ணில் நடக்கும் இத்தொடருக்கு தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளது பெருமிதம் அளிக்கிறது.

ஒருநாள் கிரிக்கெட் அரங்கில், உலக கோப்பை தொடர் மிகவும் உயர்ந்தது. இதில் பங்கேற்க ஒவ்வொரு வீரரும் விரும்புவார்கள்,'' என்றார்.

0 comments:

Post a Comment