சாதிப்பார்களா இந்திய நட்சத்திரங்கள்

காமன்வெல்த் போட்டியில் பதக்க வேட்டை நடத்திய இந்திய நட்சத்திரங்கள், ஆசிய விளையாட்டிலும் அசத்த காத்திருக்கின்றனர். இம்முறை சீனாவின் கடும் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும்.

தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளும் களமிறங்குவதால், ஒவ்வொரு போட்டியிலும் ஆக்ரோஷமான மோதலை எதிர்பார்க்கலாம்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய விளையாட்டுப் போட்டி நடக்கும். இதில், ஆசிய கண்டத்து நாடுகள் பலப்பரீட்சை மேற்கொள்ளும். தற்போது 16வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் உள்ள குவாங்சு நகரில் இன்று கோலாகலமாக துவங்குகிறது.

மொத்தம் 16 நாட்கள் நடக்கும் இந்த விளையாட்டு திருவிழா, வரும் 27ம் தேதி நிறைவு பெறுகிறது. சீனா சார்பில் அதிகபட்சமாக 1,454 பேர் அடங்கிய "ஜம்போ குழு பங்கேற்கிறது. இந்தியா சார்பில் 609 பேர் கொண்ட மிகப் பெரிய குழு பங்கேற்கிறது. துப்பாக்கி சுடுதல், பாட்மின்டன், மல்யுத்தம், ஹாக்கி, டென்னிஸ், வில்வித்தை, குத்துச்சண்டை மற்றும் கபடி போட்டிகளில் நமது வீரர், வீராங்கனைகள் சாதிக்க வாய்ப்பு உள்ளது.

கடும் சவால்:

கடந்த 2006ல் கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டில், 10 தங்கம், 17 வெள்ளி, 26 வெண்கலம் உட்பட 53 பதக்கங்கள் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 8வது இடம் பிடித்தது. சீனா 166 தங்கம் உட்பட 316 பதக்கங்களுடன் முதல் இடத்தை பிடித்தது.

தென் கொரியா(193 பதக்கம்) இரண்டாவது இடம் பெற்றது. கடந்த 2008ல் பீஜிங்கில் ஒலிம்பிக் போட்டியை நடத்திய சீனா, அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.

இதே போல ஆசிய கண்டத்திலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிக்கும். இம்முறை போட்டிகள் சொந்த மண்ணில் நடப்பது சீனாவுக்கு சாதகமான விஷயம். சீனாவை தவிர, தென் கொரியா, ஜப்பான், கசகஸ்தான், தாய்லாந்து, ஈரான் போன்ற நாடுகளும் கடும் சவாலை கொடுக்கும். இதனால், டில்லி காமன்வெல்த் போட்டி போல நம்மவர்கள் எளிதில் பதக்கம் வெல்ல முடியாது.

சீனா ஆதிக்கம்:

காமன்வெல்த் துப்பாக்கி சுடுதலில் இந்தியா 14 பதக்கம் வென்றது. ஆனால், சர்வதேச துப்பாக்கி சுடுதல் ரேங்கிங் பட்டியலில், பல்வேறு பிரிவுகளில் சீன வீரர், வீராங்கனைகள் தான் "டாப்-10 பட்டியலில் உள்ளனர். எனவே, ஆசிய விளையாட்டு துவக்க விழாவில் இந்திய கொடி ஏந்தி வர உள்ள ககன் நரங் மற்றும் ஒலிம்பிக் நாயகன் அபினவ் பிந்த்ரா பதக்கம் கைப்பற்ற சிரமப்பட வேண்டியிருக்கும்.

செய்னா சிக்கல்:

மிகவும் எதிர்பார்க்கப்படும் நமது பாட்மின்டன் நட்சத்திரம் செய்னா நேவல், உலகின் "நம்பர்-1 வீராங்கனையான சீனாவின் வாங் சின்னை வீழ்த்த கடுமையாக போராட வேண்டும். டேபிள் டென்னிசை பொறுத்தவரை உலகின் "டாப்-20 வீரர்களில் சீனாவை சேர்ந்தவர்கள் மட்டும் 11 பேர் உள்ளனர். எனவே, டேபிள் டென்னிசில் அனைத்து பதக்கங்களையும் தட்டிச் செல்ல வாய்ப்பு உள்ளது.

ரேணு பாலா சவால்:

பளுதூக்குதலில் கடின சவால் காத்திருக்கிறது. சமீபத்தில் துருக்கியில் நடந்த உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியின் 58 கி.கி., எடைப் பிரிவில் சீன வீராங்கனை டெங் வெய் ஒட்டுமொத்தமாக 237 கி.கி., தூக்கி முதலிடம் பெற்றார்.

இதே பிரிவில், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற நமது ரேணு பாலா சானு வெறும் 197 கி,கி., எடை தான் தூக்கினார். இந்த வித்தியாசத்தை வைத்தே, சீன நட்சத்திரங்களின் வலிமையை சுலபமாக எடை போடலாம்.

அத்வானி நம்பிக்கை:


தடகளத்தில் கிருஷ்ண பூனியா(வட்டு எறிதல்), டின்டு லூக்கா(800 மீ.) நம்பிக்கை தருகின்றனர். டென்னிஸ் ஒற்றையரில் கடந்த முறை வெள்ளி வென்ற சானியா மிர்சா மற்றும் சோம்தேவ் தேவ்வர்மன் சாதிக்கலாம். கடந்த முறை பில்லியர்ட்சில் அசத்திய பங்கஜ் அத்வானி, தங்கப்பதக்கத்தை தக்க வைத்துக் கொள்ள வாய்ப்பு உண்டு.

குத்துச்சண்டையில் கசகஸ்தான். உஸ்பெகிஸ்தானின் வீரர்கள் கடும் நெருக்கடி கொடுப்பார்கள். இதனை உணர்ந்து விஜேந்தர் சிங் உள்ளிட்டோர் எழுச்சி காண வேண்டும். காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு அதிக பதக்கம் பெற்று தந்த வில்வித்தை, மல்யுத்தம் போன்ற போட்டிகளில் இம்முறை தென் கொரியா, ஜப்பான், தாய்லாந்தின் சவாலை சமாளிக்க வேண்டும்.

பின்னடைவு:

இந்தியாவுக்கு கடந்த 2006ல் தங்கம் வென்று தந்த ஜஸ்பால் ராணா(துப்பாக்கி சுடுதல்), பயஸ், (டென்னிஸ்), கொனேரு ஹம்பி(செஸ்) ஆகியோர் இம்முறை பங்கேற்கவில்லை. உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் மல்யுத்த வீரர் சுஷில் குமார் விலகியுள்ளனர். கிரிக்கெட்டிலும் நமது அணி பங்கேற்கவில்லை. இப்படி பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளவர்கள் எல்லாம் விலகியது நமக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

டில்லி, காமன்வெல்த் போட்டி துவங்கிய போது இந்தியா மீது அவ்வளவாக எதிர்பார்ப்பு காணப்படவில்லை. ஆனால், நமது வீரர், வீராங்கனைகளின் மிகச் சிறப்பாக செயல்பட்டு அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தனர். இதே போல ஆசிய விளையாட்டிலும் எழுச்சி காண்பார்கள் என நம்புவோம்.

0 comments:

Post a Comment