கடந்த 2001ல் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த டெஸ்டில், இரட்டை சதமடித்து வெற்றிக்கு வித்திட்டது போல, இம்முறை மீண்டும் சாதிப்பேன்,'' என, இந்திய வீரர் லட்சுமண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த 2001ல் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 445 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணி 171 ரன்களுக்கு சுருண்டு, "பாலோ-ஆன்' பெற்றது.
பின்னர் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு லட்சுமண் (281), டிராவிட் (180) கைகொடுத்தனர். இந்திய அணி 2வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 657 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. பின்னர் 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2வது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி, 212 ரன்களுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது.
தற்போது இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மொகாலியில் நாளை துவங்குகிறது.
இதுகுறித்து இந்தியாவின் அனுபவ பேட்ஸ்மேன் லட்சுமண் கூறியதாவது:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். கடந்த 2001ல், கோல்கட்டா டெஸ்டில் 281 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டது போல, இம்முறை மீண்டும் சாதிப்பேன் என நம்புகிறேன். இதற்காக கடந்த இரண்டு வாரங்களாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இப்பயிற்சியின் மூலம் எனது "பார்ம்' நல்ல நிலையில் இருப்பதை அறிந்து கொண்டேன்.
இதனால் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றிக்கு கைகொடுப்பேன் என எதிர்பார்க்கிறேன். இத்தொடருக்கு பின் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகளுடன் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருப்பதால், திறமையை நிரூபிக்க வேண்டும்.
இத்தொடர் சொந்த மண்ணில் நடப்பது சாதகமான விஷயம். இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவதால், சவால் நிறைந்ததாக இருக்கும். ஆஸ்திரேலிய அணியில் திறமையான இளம் வீரர்கள் நிறைய இடம் பெற்றுள்ளனர். நிச்சயம் இவர்கள் இந்திய வீரர்களுக்கு நெருக்கடி கொடுப்பார்கள். இருப்பினும் எதிரணி குறித்து அதிகம் சிந்திக்காமல், போட்டியில் நூறு சதவீத ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
இந்திய அணியின் பந்துவீச்சு பலமடைந்துள்ளது. ஜாகிர், ஹர்பஜன், இஷாந்த், பிரக்யான் ஓஜா, அமித் மிஸ்ரா என சிறந்த பவுலர்கள் இடம் பெற்றுள்ளதால், எளிதில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இதேபோல பேட்டிங்கில் சேவக், காம்பிர், டிராவிட், சச்சின், தோனி என முன்னணி வீரர்கள் இடம் பெற்றிருப்பது பலம்.
இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் பலமாக இருப்பதால் தொடரை வென்று சாதிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இவ்வாறு லட்சுமண் கூறினார்.
0 comments:
Post a Comment