இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்

கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், வங்கதேச வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் வீரர்கள் லார்ட்ஸ் டெஸ்டில் "ஸ்பாட் பிக்சிங்கில்' ஈடுபட்டு பிடிபட்டனர். இதையடுத்து சூதாட்ட ஏஜன்ட் மசார் மஜீத் மற்றும் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே ஆஸ்திரேலிய வீரர்கள் வாட்சன், ஹாடின், பிரட் லீ மற்றும் மைக்கேல் ஜான்சன் ஆகியோரும், தங்களை இந்திய சூதாட்ட ஏஜன்ட்கள் அணுகியதாக தெரிவித்தனர். இந்த பிரச்னையில் புதிய திருப்பமாக, வங்கதேச வீரர்களையும் இந்திய ஏஜன்ட்டுகள் அணுகியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரியில் இந்திய அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க வங்கதேசம் சென்றது. இதில் இந்திய அணி 2-0 என தொடரை வென்றது. அப்போது வங்கதேச அணியின் துணைக்கேப்டன் சாகிப் அல் ஹசன், துவக்க வீரர் தமிம் இக்பால் ஆகிய இருவரையும் "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகியுள்ளனர்.

இதுகுறித்து பி.சி.பி., செய்தித்தொடர்பாளர் ஜலால் யூனிஸ் கூறியது:

இந்தியாவுக்கு எதிரான தொடரின் போது, எங்களது சீனியர் வீரர்கள் இருவரை சூதாட்ட ஏஜன்ட்டுகள் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள், இதுகுறித்து எங்களிடம் உடனடியாக தெரிவித்தனர். நாங்கள் உடனடியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) ஊழல் தடுப்புக் குழுவிடம் தெரிவித்தோம்.

தற்போது வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடாமல் தடுப்பது குறித்து கல்வியறிவு போதித்து வருகிறோம். இதன்மூலம் "மேட்ச் பிக்சிங்' காரணமாக எதிர்காலம் எப்படி பாதிக்கப்படும், தேசத்துக்கு எப்படி அவமானம் நேரும் என்பது குறித்து அறியலாம். தவிர, சாதாரண நபருக்கும் சூதாட்ட ஏஜன்ட்டுக்கும் உள்ள வித்தியாசம் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

முன்பின் அறியாதவர்களை சந்திக்க வேண்டாம் என்றும், அடையாளம் தெரியாமல் வரும் போன் கால்களை பேசவேண்டாம் என்றும் வீரர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு ஜலால் யூனிஸ் தெரிவித்தார்.

இதனிடையே வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஷ்ரபுல்லும், வெளிநாட்டு தொடரின் போது தன்னையும் சூதாட்டக்காரர்கள் தொடர்பு கொண்டனர் எனத் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment