டெஸ்டில் விளையாட விருப்பமில்லை

இனிவரும் காலங்களில், மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாட விருப்பம் இல்லை,'' என, பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டி கேப்டன் சயீத் அப்ரிதி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. லார்ட்சில் நடந்த முதல் டெஸ்ட் போட்டிக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக அப்ரிதி இருந்தார். இப்போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைய, டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்தார் அப்ரிதி.

அதன்பின் சல்மான் பட் தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் அணி, சூதாட்ட சர்ச்சையில் சிக்கி மோசமான தோல்வி அடைந்தது.

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் "ஆல்-ரவுண்டர்' அப்ரிதி கூறியதாவது: டெஸ்டில் இருந்து ஓய்வை அறிவித்த நான், மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு இல்லை. ஏனெனில் இதற்கான தகுதியை இழந்துவிட்டேன்.

முன்னதாக, டெஸ்ட் போட்டியில் விளையாட தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படாததே இதற்கு காரணம். தவிர, தற்போது எனது கவனம் முழுவதையும் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை (50 ஓவர்) தொடர் மீது வைத்துள்ளேன். இதனால் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு நேரமிருப்பதாக தெரியவில்லை.

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன், சிறந்த பாகிஸ்தான் அணியை உருவாக்கிவிட்டு செல்ல வேண்டும் என நினைக்கிறேன். இதே கருத்தை முகமது யூசுப், அப்துல் ரசாக், சோயப் அக்தர் உள்ளிட்ட சீனியர் வீரர்களும் தெரிவித்துள்ளனர். இதற்காக தற்போதிருந்தே இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து, சிறந்த அணியை உருவாக்க வேண்டும்.

இங்கிலாந்து தொடரில் பாகிஸ்தான் வீரர் சூதாட்ட புகாரில் சிக்கியது வருத்தம் அளிக்கிறது. டெஸ்ட் தொடரிலிருந்து பாதியில் நாடு திரும்பியதால், அங்கு என்ன நடந்தது என முழுமையாக தெரியவில்லை.

கம்ரான் அக்மல் சிறந்த வீரர். "பார்ம்' இன்றி தவிக்கும் இவருக்கு தற்போது ஓய்வு தேவைப்படுகிறது என நினைக்கிறேன். ஏனெனில் இவர் அடுத்து நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் சாதிக்க, சிறிது ஓய்வுக்கு பின் பயிற்சி மேற்கொண்டால் நன்றாக இருக்கும்.

ஆசிய மண்ணில் உலக கோப்பை தொடர் நடக்க இருப்பதால், பாகிஸ்தான் அணிக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. முழுதிறமையை வெளிப்படுத்தி கோப்பை வெல்ல போராடுவேன்.

இவ்வாறு அப்ரிதி கூறினார்.

0 comments:

Post a Comment