இந்திய அணிக்கு நெருக்கடி: கங்குலி

உலககோப்பை கிரிக்கெட் தொடரில் (2011), இந்திய அணிக்கு கடும் நெருக்கடி காத்திருக்கிறது, என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.


அடுத்த ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் தொடரை (50 ஓவர்), இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் இணைந்து நடத்துகின்றன. பிப்ரவரி 19 ம் தேதி தொடர் துவங்குகிறது. பைனல் போட்டி ஏப். 2 ல் நடக்கிறது.கடந்த 1983 ம் ஆண்டு உலககோப்பை தொடரில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்று சாதித்தது.


அதற்குப் பின் நடந்த 6 உலககோப்பை தொடர்களில் இந்திய அணி கோப்பை கைப்பற்ற வில்லை. அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடக்க உள்ள உலககோப்பை தொடரில், கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ள அணியாக இந்தியா கருதப்படுகிறது.


ஆனால் இது மிகவும் சிரமம் என்கிறார் முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலி. இது குறித்து இவர் கூறியது: சொந்த மண்ணில் உலககோப்பை தொடரில் விளையாட உள்ள இந்திய அணிக்கு நெருக்கடி அதிகம். உள்நாட்டு ரசிகர்களின் அதிகப்படியான எதிர்பார்ப்பு, இந்திய அணி வீரர்களுக்கு மனதளவில் நெருக்கடியை எற்படுத்தும்.


இத்தொடரில் எந்த அணி கோப்பை வெல்லும் என்பதை கணிப்பது சிரமம். கோப்பை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு உண்டு. இந்திய அணியில் சச்சின், சேவக், தோனி, யுவராஜ், காம்பிர் உள்ளிட்ட உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆனால் அணியின் பந்து வீச்சு பலவீனமாக உள்ளது. இருப்பினும் உலககோப்பைக்குள் அணியின் பந்து வீச்சு பலப்படும் என எதிர்பார்க்கிறேன்.


சச்சின் பலம்: இந்திய அணிக்கு சச்சின் தான் பலம். கடந்த 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் சச்சின், பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். இந்த முறை இந்திய அணிக்கு அவர் உலககோப்பை பெற்றுத் தருவார் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

0 comments:

Post a Comment