சடுகுடு சக்கரவர்த்தி

கபடி என்று அழைக்கப்படும் சடுகுடு விளையாட்டு தமிழகத்தில்தான் உருவானது என்றாலும் இந்த விளையாட்டு இந்தியா முழுவதும் குறிப்பாக கிராமங்களில் அதிகம் விளையாடப்படுகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் தெற்காசிய நாடுகளிலும் ஜப்பான், ஈரான் போன்ற நாடுகளுக்கும் இந்த விளையாட்டு பரவியுள்ளது.

வங்கதேச நாட்டின் தேசிய விளையாட்டாகவும், இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மாநில விளையாட்டாகவும் உள்ளது கபடி. தமிழர் விளையாட்டான கபடியில் இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்களைக் காட்டிலும் பஞ்சாபியர்கள் அதிகம் ஈடுபாடு கொண்டுள்ளனர். பஞ்சாபைச் சேர்ந்த பலர் இந்த விளையாட்டில் சாதனை நிகழ்த்தியுள்ளனர். அவர்களில் மிக முக்கியமானவர் பல்வீந்தர் சிங் ஃபித்தா.


1956-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டத்தில் பிறந்தார் பல்வீந்தர். தனது 4-வது வயது முதலே கபடி விளையாட்டில் ஆர்வம் காட்டத் தொடங்கினார் அவர். சிறந்த கபடி வீரராக வர வேண்டும் என்ற லட்சியத்துடன் தீவிரமாக பயிற்சி எடுத்து போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். கபடியின் மைந்தன் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் பல்வீந்தர் தனது பள்ளி மற்றும் கல்லூரி நாள்களில் பல போட்டிகளில் பங்கேற்று வியத்தகு வெற்றிகளை குவித்தார்.


1973-ம் ஆண்டு முதல் முதலாக தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கபடிப் போட்டியில் பங்கேற்று விளையாடினார். தனது முதல் தேசிய போட்டியிலேயே தன் தனித்திறமையால் அவர் பங்கேற்ற அணியை தங்கப் பதக்கம் பெற வைத்தார் பல்வீந்தர் சிங்.


பின்னர் கல்லூரி வாழ்க்கையிலும் பல போட்டிகளில் பங்கேற்று சாதனைகள் படைத்தார். 1973-ம் ஆண்டுக்கும் 1991-ம் ஆண்டுக்கும் இடையே நடந்த 18 தேசிய கபடி போட்டிகளில் பங்கற்ற பல்வீந்தர் 10 போட்டிகளில் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். அது மட்டுமல்ல, பல்வேறு சர்வதேச மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான போட்டிகளிலும் அவர் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


பஞ்சாப் மாநில காவல்துறையில் பணிபுரியும் பல்வீந்தர் அந்த அணிக்காக விளையாடினார். 1977-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை நடந்த பல்வேறு மாநிலங்களுக்கு இடையேயான காவல்துறை விளையாட்டுப் போட்டிகளில் கபடி போட்டியில் பல்வீந்தரின் தனித் திறமையால் பஞ்சாப் அணி 22 தங்கப் பதக்கங்களை வென்றது.


1982-ம் ஆண்டு தில்லியில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர் பங்கேற்ற இந்திய கபடி அணி தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது. 1984-ம் ஆண்டு நடந்த ஆசிய கபடிப் போட்டிகளில் இந்திய அணியின் துணை கேப்டனாக களமிறங்கிய பல்வீந்தர் தனது அணியை தங்கப் பதக்கம் பெற வைத்தார்.


1989-ம் ஆண்டு இஸ்லாமாபாதில் நடைபெற்ற தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியன் கேப்டனாக களமிறங்கினார் பல்வீந்தர். அந்தப் போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.


25-ம் ஆண்டுகளுக்கும் மேலாக கபடியில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்திய பல்வீந்தர் சிங் ஃபித்தா 1997-ம் ஆண்டு கபடி விளையாடுவதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கபடி விளையாட்டில் அவரது சாதனைகளைப் பாராட்டும் விதமாக 1999-ம் ஆண்டு அவருக்கு அர்ஜுனா விருது வழங்கி கௌரவித்தது மத்திய அரசு.

0 comments:

Post a Comment