கிரிக்கெட்டுக்கு "ஜென்டில் மேன்' விளையாட்டு என்ற பெயர் உள்ளது. போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு சம்பளம் அதிகம். ஒரு போட்டிக்கு 2 லட்சம் வரை வீரர்கள் சம்பாதிக்கிறார்கள்.
தவிர, விளம்பர வருமானம் கோடிக் கணக்கில் கொட்டுகிறது. இவ்வளவு பணம் சம்பாதித்தும், ஒரு சில கிரிக்கெட் வீரர்களுக்கு இது போதவில்லை. "மேட்ச் பிக்சிங்', "ஸ்பாட் பிக்சிங்' என பல சூதாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் மூலம் ஒரே போட்டியில், பல கோடி ரூபாய் சம்பாதிக்கின்றனர். பார்ம் இருந்தால் மட்டுமே, கிரிக்கெட் விளையாட முடியும். தவிர, அணியிலும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் அணியில் வாய்ப்பு கிடைக்கும் சமயத்திலேயே சூதாட்டத்தில் ஈடுபட்டு வருமானத்தை பெருக்கிக் கொள்ள நினைக்கின்றனர்.
பாக்., அதிகம்:
ஆஸ்திரேலியா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட முன்னணி அணிகளை சேர்ந்த வீரர்கள், பல்வேறு சமயங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். சூதாட்டத்தில் அதிக ஆதிக்கம் செலுத்தி வரும் அணி பாகிஸ்தான் தான். . இந்த அணி வீரர்கள் அடிக்கடி சூதாட்டத்தில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்குகின்றனர்.
இருப்பினும் சூதாட்டத்தை விட்டுவிட மனதில்லை. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த டெஸ்ட், இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிர், வாஹப் ரியாஸ் உள்ளிட்ட இளம் வீரர்கள் தான் சூதாட்டத்தில் சிக்கியுள்ளனர்.
பயம் இல்லை:
இளம் வயதில் சிறப்பாக ஆடி, பிரகாசமான எதிர்காலத்தை எட்ட, இம்மாதிரியான வீரர்களுக்கு ஆசை இல்லை. ஒரு சில போட்டிகள் விளையாடினாலும், சூதாட்டத்தின் மூலம் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே இவர்களது விருப்பமாக உள்ளது. இதனால் எந்தப் பிரச்னை பற்றியும் கவலைப்படாமல், சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
உலக கிரிக்கெட்டை நிர்வகிக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) மெத்தனப் போக்கும் இதற்கு முக்கிய காரணம். ஐ.சி.சி., சார்பில் செயல்பட்டு வரும் ஊழல் கண்காணிப்பு குழு, சொல்லிக் கொள்ளும் அளவுக்கு செயல்பட வில்லை. மீடியாக்கள் சூதாட்டப் பிரச்னையை கிளப்பிய பின்னரே, ஊழல் கண்காணிப்பு குழு செயல்படத் துவங்கி உள்ளது.
இதனால் சூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்களுக்கும் துளி அளவும் பயம் ஏற்படுவது கிடையாது. தவிர, சூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்களுக்கு வழங்கப்படும் தண்டனை, பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை.
கடுமையான தண்டணை:
சூதாட்டப் பிரச்னையில் ஈடுபடும் வீரர்களுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். பல்வேறு கட்டங்களில் விசாரணை நடத்துவதை விட்டுவிட்டு, உடனடியாக தண்டனை வழங்க வழிவகø செய்ய வேண்டும். ஐ.சி.சி., மற்றும் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் போர்டுகள் இதில் துரிதமாக செயல்பட வேண்டும். அப்போது தான், கிரிக்கெட் மீதான மக்களின் ஈர்ப்பு இனி வரும் காலங்களில் நிலை நிற்கும்.
நாட்டுப்பற்று அவசியம்:
எல்லாவற்றுக்கும் மேலாக கிரிக்கெட் வீரர்களுக்கு நாட்டுப்பற்று மிகவும் அவசியம். பணத்துக்கு முக்கியத்துவம் தருவதை தவிர்த்து, தாய்நாட்டின் வெற்றிக்காக போராடும் குணம் வேண்டும். அப்போது தான் சூதாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
0 comments:
Post a Comment