அதிக முறை "டக்' விக்கெட் எடுத்தவர்

கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக வீரர்களை (104) டக் அவுட் ஆக்கியவர் என்ற சாதனைக்குரியவர் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ரத். வசீகரமான மிதவேகப் பந்து வீச்சின் மூலம் எதிரணி வீரர்களையும் கவர்ந்தவர்.

மெக்ரத், ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ செüத்வேல்ஸில் 1970-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி பிறந்தார். 1993-ல் நியூ செüத்வேல்ஸ் அணிக்காக முதன் முறையாக கிரிக்கெட்டில் களமிறங்கினார். அதற்கு அடுத்த ஆண்டே ஆஸ்திரேலிய தேசிய அணியில் இடம் பிடித்தார்.


1993 நவம்பரில் நடைபெற்ற ஆஸ்திரேலியா- நியூசிலாந்து டெஸ்ட் தொடரே மெக்ரத்துக்கு முதல் சர்வதேச போட்டியாகும். அதே ஆண்டு டிசம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கினார்.


1995-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை ஆஸ்திரேலியா வென்றது. வேகப் பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தி வந்த, மேற்கிந்திய தீவுகளின் பந்து வீச்சாளர்களே வியக்கத்தகும்
வகையில் அந்த தொடரில் மெக்ரத் சிறப்பாக பந்து வீசினார்.


தனது அசாதாரணமான பந்து வீச்சின் மூலம் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சிறந்த பந்து வீச்சாளராக பரிமளித்தார்.


100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் என்ற சாதனையை 2004-ம் ஆண்டு மெக்ரத் பதிவு செய்தார். 2005-ம் ஆண்டு நடந்த ஐ.சி.சி. சூப்பர் சீரியஸ் போட்டியில், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப் பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். முதல் மூன்று இடங்களிலும் உள்ளவர்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் (முரளீதரண், வார்னே, கும்ப்ளே).


2005-ம் ஆண்டு நடந்த ஆஷஸ் போட்டியின் முதல் ஆட்டத்தில், மார்கஸ் டிரெஸ்கோதிக்கை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.


2006 டிசம்பரில் தொடங்கிய அடுத்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை படுதோல்வி அடையச் செய்தது. இந்த வெற்றியில் மெக்ரத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் 21 விக்கெட்டுகளை மெக்ரத் வீழ்த்தினார். 2007-ம் ஆண்டு ஜனவரியில் நடந்த இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தோடு கிரிக்கெட்டிலிருந்து மெக்ரத் ஓய்வு பெற்றார்.


124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 563 விக்கெட்டுகளையும், 250 ஒரு நாள் போட்டிகளில் 381 விக்கெட்டுகளையும் மெக்ரத் வீழ்த்தியுள்ளார். பீல்டிங்கிலும் மெக்ரத் சிறந்து விளங்கினார். 6 அடி 5 அங்குல உயரம் கொண்ட மெக்ரத், பந்தை சரியாக த்ரோ செய்வதில் வல்லவர்.


மேலும், ஒரே பேட்ஸ்மேனை அதிக முறை ஆட்டமிழக்கச் செய்தவர் என்ற சாதனைக்கும் உரியவர் மெக்ரத். இங்கிலாந்தின் மைக் ஆதெர்டனை மட்டும் 19 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.


2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். போட்டிகளில் டெல்லி அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.


மெக்ரத்துக்கு ஜேம்ஸ், ஹோலி என்ற இரு குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி ஜேன் லூயிஸ் புற்றுநோய் காரணமாக 2008-ம் ஆண்டு உயிரிழந்தார். மெக்ரத், தன் மனைவியுடன் சேர்ந்து துவக்கிய மெக்ரெத் அறக்கட்டளை, புற்றுநோய் சிகிச்சை மற்றும் விழிப்புணர்வுக்கு நிதிதிரட்டும் சேவையில் ஈடுபட்டுள்ளது.

0 comments:

Post a Comment