காமன்வெல்த் போட்டியில் இன்னொரு அதிர்ச்சி. இம்முறை வீரர்கள் தங்கும் அறையில் பாம்பு ஓடுவதை பார்த்து, தென் ஆப்ரிக்க குழுவினர் மிரண்டு போயுள்ளனர். வீரர்களின் உயிரை பணயம் வைத்து, விளையாட்டு கிராமத்தில் தங்க முடியாது என, அதிரடியாக தெரிவித்துள்ளனர்.
டில்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி வரும் அக்டோபரில்( 3-14) நடக்க உள்ளது. இதற்காக சுமார் ரூ. 70 ஆயிரம் கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. இதில், பெருமளவு ஊழல் நடந்துள்ளது. தரமற்ற கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதால், ஜவஹர்லால் நேரு மைதானத்தின் மேற்கூரை, நடைமேம்பாலம் போன்றவை இடிந்து விழுந்தன.
நிலைமை மோசம்:
தவிர, போட்டியில் பங்கேற்கும் 71 நாடுகளை சேர்ந்த 8, 500 வீரர், வீராங்கனைகள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள விளையாட்டு கிராமமும் அசுத்தமாக உள்ளது. கழிப்பறைகள் மோசமான நிலையில் உள்ளன. வீரர்கள் தங்குவதற்கான அறைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. ஓய்வு எடுப்பதற்காக உட்கார்ந்தாலே, படுக்கை நிலைகுலைந்து போகிறது.
"வயரிங்', "பிளம்பிங்' பணிகள் முழுமையாக முடிக்கப்படாததால், பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருப்பதால், கொசுக்கள் அதிகம் காணப்படுகின்றன. இதனால், டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்படி, விளையாட்டு கிராமத்தின் நிலைமை படுமோசமாக இருப்பதால், இங்கு வருவதற்கு பயந்த நட்சத்திர வீரர்கள், போட்டியில் இருந்து விலகினர்.
ஆப்ரிக்கா அச்சம்:
இந்தச் சூழலில், தென் ஆப்ரிக்க குழுவினர் மட்டும் விளையாட்டு கிராமத்தில் தங்க சம்மதம் தெரிவித்தனர். ஆனால், இவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. இந்த நாட்டின் வீரர்கள் தங்குவற்காக ஒதுக்கப்பட்ட அறையில் பாம்பு ஒன்று ஓடுவதை பார்த்துள்ளனர். இதனால், அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
இது குறித்து தென் ஆப்ரிக்க தூதர் ஹாரிஸ் மபுலேலா மஜேக் கூறியது:
எங்களது அறையில் பாம்பு ஒன்றை பார்த்தோம். இது இந்திய வகையை சேர்ந்ததா என்பது பற்றி தெரியாது. பாம்பு இருக்கும் அறையில், எங்கள் வீரர்களை தங்க சொல்ல இயலாது. அவர்களது உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது மிகுந்த கவலை அளிக்கிறது. தவிர, தரைப்பகுதி முழுவதும் நீர் நிரம்பியுள்ளது. மேற்கூரையும் ஈரப்பதமாக உள்ளது. ஒட்டுமொத்தமாக , அறைகளின் நிலைமை மோசமாக உள்ளது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் வரை, விளையாட்டு கிராமத்தில் தங்க முடியாது.
தற்போதைக்கு போட்டியில் இருந்து விலகும் உத்தேசம் இல்லை. அனைத்து வசதிகளும் செய்து முடிக்கப்பட்ட பின், எங்களது வீரர்கள் போட்டியில் பங்கேற்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Post a Comment