காமன்வெல்த்: குறைகளை சரிகட்டும் நேரம்

ஒலிம்பிக் போன்ற போட்டிகளை நடத்த வேண்டும் என்று இந்தியா இனி விரும்பினால் கூட, இந்த காமன்வெல்த் போட்டிகள் அதற்கு கரும்புள்ளியாக இருக்கும் என்பதால், விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டவர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

ஊழல், நிர்வாகிகளிடையே ஒற்றுமையின்மை, சர்வதேச தரத்தில் அரங்குகளையும், தங்குமிடம் வசதிகளை செய்யாதது உள்ளிட்டவை, எதிர்காலத்தில், இந்தியாவுக்கு கெட்ட பேரை ஏற்படுத்தித் தருவதாக அமைந்துவிட்டன.

விளையாட்டைத் துவக்கி வைப்பது, இளவரசர் சார்லசா அல்லது இந்திய ஜனாதிபதியா என்ற கேள்விக்கு இன்று வரை விடை இல்லை. ஊழல் எனும் விஷயம்தான், ஏற்பாடுகளில் உள்ள குளறுபடிகளுக்கு காரணமாக விளங்குகின்றன.

உலகின் முக்கிய விளையாட்டான காமன்வெல்த் போட்டியை நடத்தும் பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது. தலைநகர் டில்லியில், வரும் அக்.3 ம் தேதி முதல் 14 வரை நடக்க உள்ளது. இப்போட்டி (2010) நடத்தும் உரிமையை கடந்த 2003 ம் ஆண்டு போராடி பெற்றது இந்தியா.

மைதானக் கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட இப்போட்டிக்கான ஆயத்தப்பணிகளை செய்து முடிக்க, இடையில் 7 ஆண்டு காலம் இருந்தது. ஆனால் இக்காலக்கட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த காமன்வெல்த் ஒருங்கிணைப்பு கமிட்டி, இந்திய ஒலிம்பிக் சங்கம் உள்ளிட்ட முக்கிய விளையாட்டு அமைப்புகள் கடந்த ஆண்டு தான் கண் விழித்தன.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. விரைவாக பணிகளை முடிக்க வேண்டும் என்பதால், தரமற்ற பொருட்களை வைத்து மைதானங்கள் கட்டுப்பட்டுள்ளன. இதன் விளைவால்தான், முக்கியமான ஜவஹர்லால் மைதானத்தின் மேற் கூரை இடிந்து விழுந்தது. இதனையடுத்து மைதானத்தின் வெளியே உள்ள நடைமேம்பாலம் அடியோடு இடிந்தது.

இதற்குப் பின் இங்குள்ள பளுதூக்குதல் மையத்தின் மேற்கூரை இடிந்தது. இச்சம்பவங்களில் டில்லி துணை கமிஷ்னர் உள்ளிட்ட 30 பேர் வரை காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். காமன்வெல்த் போட்டி துவங்க 10 நாட்கள் இருந்த சமயத்தில் தான், இவை நடந்துள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக வீரர், வீராங்கனைகள் தங்க உள்ள விளையாட்டு கிராமத்தில் சுகாதாரம் இல்லை.

டில்லியில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக டெங்கு காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட முன்னணி அணிகள் கலந்து கொள்ள சம்மதித்த போதும், முன்னணி வீரர், வீராங்கனைகள் விலகும் அவலம் தொடர்கிறது.

ஏன் இந்தப் பிரச்னை?:

கடந்த 1998 ம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் காமன்வெல்த் போட்டி நடந்தன. அதற்குப் பின் ஆசிய கண்டத்தில் இந்தியாவில் தான், இப்போட்டி நடத்தப்பட உள்ளது. இப்பெருமை பெற்ற இந்தியாவால், அதனை சிறப்பாக நடத்திக் காட்டுவதில் ஏன் இந்தப் பிரச்னை என்பது புரியாத புதிராக உள்ளது. இந்தியாவுக்கு அந்தத் தகுதி இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.

உலக வல்லரசுகளுக்கு அச்சுறுத்தலாக வளர்ந்து வரும் இந்தியாவுக்கு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் தகுதியே உள்ளது என்பது தான் உண்மை. ஆனால் 3 காரணங்கள் இந்தியாவை ஆட்டிப்படைத்து வருகின்றன.

கடந்த 2008 ம் ஆண்டு சீனத் தலைநகர் பீஜிங்கில், ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. உலகமே வியக்கும் வகையில் போட்டிகளை நடத்திக் காட்டியது சீனா. ஆனால் காமன்வெல்த் போட்டிகளை நடத்த இந்தியா திணறி வருகிறது. இதன் மூலம் பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முதல் காரணம் ஊழல் தான். மைதானக் கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட எல்லாவற்றுக்குமே இரண்டாம் தரத்திலான பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.

காமன்வெல்த் போட்டிக்காக அரசு ஒதுக்கிய தொகையை, தங்களால் முடிந்த வரை பலரும் சுருட்டி உள்ளனர். ஆனால் செலவுக் கணக்கு மட்டும் எகிறிய வண்ணம் உள்ளது. உதாரணமாக கழிவறையில் பயன்படுத்தப்படும் டாய்லட் "பேப்பர்', 4000 ரூபாய்கு வாங்கப்பட்டுள்ளது. இது பலருக்கு அல்ல. ஒருவருக்கு மட்டும். அப்படியானால், சுமார் 8,500 வீரர், வீராங்கனைகள் விளையாட்டு கிராமத்தில் தங்க உள்ளனர். இதன் மதிப்பு 3.5 கோடி ரூபாயை எட்டுகிறது. இம்மாதிரி சம்பவம் எங்காவது நடக்குமா. இந்தியாவில் நடந்துள்ளது .

இரண்டாவதாக பயங்கரவாத அச்சுறுத்தல், மிகப் பெரிய பலவீனத்தை இந்தியாவுக்கு தந்துள்ளது. காமன்வெல்த் போட்டி நடக்க உள்ள நிலையில், கடந்த 19 ம் தேதி டில்லி, ஜூம்மா மசூதி அருகே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், தைவானை சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். இது டில்லி காமன்வெல்த் போட்டிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது.

இதனைக் காரணமாகக் கொண்டு பல வீரர்கள் காமன்வெல்த் போட்டிகளை புறக்கணித்துள்ளனர். கடந்த 2000 லிருந்து தற்போது வரை டில்லியில் 14 முறை, பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. காமன்வெல்த் போட்டிகள் நடக்க உள்ள நிலையில், முன்னணி அணிகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை நீக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இது மிகப் பெரிய பின்னடைவு.

மூன்றாவதாக இந்திய விளையாட்டு அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை. காமன்வெல்த் குளறுபடிகளுக்கு ஒவ்வொருவரும் மாறி, மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். போட்டி துவங்க இன்னும் ஒரு வார காலம் மட்டுமே உள்ள நிலையில், குறைகளை சரிகட்டத்தான் முடியுமே தவிர, சரி செய்ய முடியாது.

0 comments:

Post a Comment