நம்புங்க இன்னும் இருக்கு பைனல் வாய்ப்பு

முத்தரப்பு தொடரில் அதிசயம் அரங்கேறியது.நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில், விராத் கோஹ்லி சதம் விளாச, இந்திய அணி 321 ரன்களை 36.4 ஓவரில் எடுத்து "சூப்பர்' வெற்றி பெற்றது.

இதன் மூலம் முக்கியமான போனஸ் புள்ளியை பெற்று, "பைனல்' வாய்ப்பை தக்க வைத்தது. இலங்கையின் தில்ஷன், சங்ககராவின் சதம் வீணானது. மார்ச் 2ல் நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இலங்கையை வீழ்த்தினால், இந்தியா பைனலுக்கு செல்வது உறுதி.

இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை அணிகள் மோதிய லீக் போட்டி ஹோபர்ட்டில் நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் காயமடைந்த இர்பான் பதானுக்குப் பதில், ஜாகிர் கான் இடம் பெற்றார்.


சூப்பர் ஜோடி:

இலங்கை அணிக்கு கேப்டன் ஜெயவர்தனா, தில்ஷன் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. ஜாகிர் கான் பந்தில் சிக்சர் அடித்த ஜெயவர்தனா (22), ஜடேஜா சுழலில் வீழ்ந்தார். பின் தில்ஷனுடன் இணைந்த சங்ககரா, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


இரண்டு சதம்:

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தில்ஷன், ஒருநாள் அரங்கில் 11வது மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் சதம் அடித்தார். சங்ககரா தன்பங்கிற்கு 13வது மற்றும் இந்தியாவுக்கு எதிரான 4வது சதத்தை பதிவு செய்தார். இந்த ஜோடியை பிரிக்க தோனி எடுத்துக் கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை. இரண்டாவது விக்கெட்டுக்கு 200 ரன்கள் சேர்த்த போது, ஒருவழியாக பிரவீண் குமார் வேகத்தில், சங்ககரா (105 ரன்கள், 87 பந்து) போல்டானார்.


இமாலய இலக்கு:

பெரேரா (3) ரன் அவுட்டானார். மாத்யூஸ் 14 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் தில்ஷன், சிக்சர்களாக விளாச, இலங்கை அணி 50 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 320 ரன்கள் எடுத்தது. ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில், தனது அதிகபட்ச ரன்களை எடுத்த தில்ஷன் (160 ரன்கள், 165 பந்து), சண்டிமால் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.


கடின கணக்கு:

இந்திய அணி 40 ஓவரில் 321 ரன்கள் எடுத்து வென்றால் மட்டுமே, "போனஸ்' புள்ளி கிடைக்கும் என்ற நிலையில் களமிறங்கியது. சேவக், சச்சின் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. குலசேகராவின் அடுத்தடுத்த ஓவர்களில் இருவரும் தலா ஒரு 2 பவுண்டரி விளாசினர். மலிங்கா ஓவரில் சேவக், அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் அடிக்க, இந்திய அணியின் ஸ்கோர், 5.3 ஓவரில் 50 ரன்களை எட்டியது.

இந்நிலையில் சேவக் (30), சச்சின் (39) இருவரும் சீரான இடைவெளியில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தனர்.


இனித்த இளமை:

இதன் பின் "இளம்' வீரர்கள் காம்பிர், விராத் கோஹ்லி ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இவர்கள் பந்துகளை வீணாக்காமல், ஒன்று இரண்டு ரன்களை எளிதில் எடுக்க, அணியின் "ரன்ரேட்' சீராக இருந்தது. பின், மாத்யூஸ் பந்தில் விராத் கோஹ்லி, சிக்சர் அடித்து அதிரடியை துவக்க 27.2 ஓவரில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது.

மூன்றாவது விக்கெட்டுக்கு 109 பந்துகளில், 115 ரன்கள் சேர்த்த நிலையில், 63 ரன்கள் எடுத்த காம்பிர், ரன் அவுட்டானார்.


அதிரடி சதம்:

அடுத்து வந்த ரெய்னா, விராத் கோஹ்லிக்கு நல்ல "கம்பெனி' கொடுக்க, குலசேகராவின் ஒரு ஓவரில், இவர் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். விராத் கோஹ்லி ஒருநாள் அரங்கில் தனது 9வது சதம் (76 பந்து) அடித்தார். மலிங்கா வீசிய போட்டியில் 35வது ஓவரில் ஒரு சிக்சர், 4 பவுண்டரி என அடுத்தடுத்து விளாச, 35வது ஓவரில் இந்திய அணி 300 ரன்களை கடந்தது.


"சூப்பர்' வெற்றி:

மலிங்காவின் அடுத்த ஓவரில் விராத் கோஹ்லி, மீண்டும் இரண்டு பவுண்டரி அடிக்க, இந்திய அணி 36.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 321 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. நான்காவது விக்கெட்டுக்கு 55 பந்துகளில் 120 ரன்கள் சேர்த்த விராத் கோஹ்லி (86 பந்து, 133 ரன்கள்), ரெய்னா (40) ஜோடி அவுட்டாகாமல் இருந்தது.


பைனலுக்கு செல்வது எப்படி

முத்தரப்பு தொடரில் இன்னும் ஒரு லீக் போட்டி மீதமுள்ளது (மார்ச் 2, ஆஸி-இலங்கை). இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியா (19 புள்ளி), இந்தியா (15), இலங்கை (15) அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. கடைசி லீக் போட்டியில் இலங்கை வெல்லும் பட்சத்தில், இந்திய அணி வெளியேற நேரிடும். மாறாக ஆஸ்திரேலியா வென்றால், இந்தியா, இலங்கை அணிகள் தலா 15 புள்ளிகள் பெற்றிருக்கும். அப்போது இத்தொடர் விதிப்படி, இரு அணிகள் மோதிய 4 போட்டியில் இந்திய அணி 2ல் வெற்றி பெற்றுள்ளதால், பைனலுக்கு சென்று விடும்.


321 ரன்களை அடைந்த வழி

ரன்கள் பந்துகள்

முதல் 50 ரன்கள் 5.3 ஓவர் (33 பந்து)
100 ரன்கள் 11.1 ஓவர் (67 பந்து)
150 ரன்கள் 18.2 ஓவர் (110 பந்து)
200 ரன்கள் 27.2 ஓவர் (164 பந்து)
250 ரன்கள் 31.1 ஓவர் (187 பந்து)
300 ரன்கள் 35 ஓவர் (210 பந்து)
321 ரன்கள் 36.4 ஓவர் (220 பந்து)


எங்கள் கையில் எதுவும் இல்லை: தோனி

இந்திய அணி கேப்டன் தோனி கூறுகையில்,"" நான் பங்கேற்ற ஒருநாள் போட்டிகளில் சிறப்பானவற்றில் இதுவும் ஒன்று. 40 ஓவரில் 321 ரன்கள் தேவை என்ற நிலையில், சச்சின், சேவக் நல்ல துவக்கம் கொடுத்தனர். இதை கோஹ்லி, காம்பிர் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். ஒட்டுமொத்தமாக சிறப்பான முறையில் திறமை வெளிப்படுத்தியதே வெற்றிக்கு காரணம். பைனலுக்கு முன்னேற இனி எங்கள் கையில் எதுவும் இல்லை,'' என்றார்.


அதிவேக சதம்

நேற்றைய போட்டியில் 44 பந்துகளில் அரைசதம் கடந்த விராத் கோஹ்லி, பின் 76 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். ஒரு நாள் அரங்கில் இவர் எடுத்து அதிவேக சதம் இது தான்.

* இதுவரை 9 சதம் அடித்துள்ளார் கோஹ்லி. இதில் 8 போட்டிகளில் இந்தியா வென்றது.

* நேற்று இவர் எடுத்த 133 ரன்கள் தான், ஒரு நாள் கிரிக்கெட்டில் எடுத்த அதிகபட்ச ரன்கள்.

* ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய வீரர் எடுத்த மூன்றாவது அதிகபட்ச ரன்கள் இது. இதற்கு முன் கங்குலி (141, எதிர்-பாகிஸ்தான், அடிலெய்டு-2000), யுவராஜ் சிங் (139, எதிர்-ஆஸ்திரேலியா, சிட்னி, 2004)

* சமீபத்தில் நடந்த டெஸ்ட் தொடரில் சச்சின், லட்சுமண், டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் இருந்த நிலையில், விராத் கோஹ்லி மட்டும் தான் சதம் (116) அடித்து இருந்தார். தற்போது, ஒருநாள் தொடரிலு<ம் சதம் அடித்து அசத்தியுள்ளார்.


சிறந்த "சேஸ்'

நேற்று 321 ரன்களை துரத்திய வெற்றி பெற்ற இந்திய அணிக்கு, ஆஸ்திரேலிய மண்ணில் இது, சிறந்த "சேசாக' அமைந்தது. இதற்கு முன் இத்தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 270 ரன்களை "சேஸ்' செய்து வென்று இருந்தது.

* ஒட்டுமொத்தமாக இந்திய அணிக்கு, ஒருநாள் அரங்கில் இது மூன்றாவது சிறந்த "சேஸ்' . முன்னதாக, இங்கிலாந்து (326 ரன்கள், லார்ட்ஸ்-2002), வெஸ்ட் இண்டீஸ் (325 ரன்கள், ஆமதாபாத், 2002), அணிக்கு எதிராக பெரிய இலக்கை துரத்தி வெற்றி பெற்றது.

* தவிர, 2010ல் நியூசிலாந்துக்கு எதிரான பெங்களூரு போட்டியில் 321 ரன்கள் எடுத்து வென்றது.

* இந்திய அணி 300 அல்லது அதற்கு மேலான ரன்களை "சேஸ்' செய்து வெற்றி பெறுவது 12 வது முறை. இதை இலங்கை (4 முறை), இங்கிலாந்து (3), பாகிஸ்தான் (2) மற்றும் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக இந்த இலக்கை எட்டியுள்ளது.


இரண்டாவது அணி:300க்கும் மேற்பட்ட ரன்களை 40 ஓவருக்குள் "சேஸ்' செய்து வென்ற அணிகள் வரிசையில் இந்திய அணி இரண்டாவது இடம் பெற்றது. இதற்கு முன் இங்கிலாந்துக்கு (321/7) எதிராக, 2006ல் லீட்சில் நடந்த போட்டியில், இலங்கை அணி 37.3 ஓவரில், 324/2 என்ற ரன்களை எடுத்து முதல் அணியாக சாதித்துள்ளது.

0 comments:

Post a Comment