இறங்கி வருகிறது பி.சி.சி.ஐ., - சகாராவுடன் சமரச பேச்சு

சகாரா நிறுவனத்துடனான சிக்கலுக்கு தீர்வு காண, திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக பி.சி.சி.ஐ., தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் நீண்ட நாள் "ஸ்பான்சர்' சகாரா. பல்வேறு காரணங்களைக் கூறி, இந்திய கிரிக்கெட் போர்டுடனான (பி.சி.சி.ஐ.,) ஒப்பந்தத்தை துண்டித்தது. புனே வாரியர்ஸ் ஐ.பி.எல்., அணியின் உரிமையையும், வேறு யாருக்கும் விட்டுத்தரத் தயார் என்று அறிவித்தது.

தவிர, ஐந்தாவது தொடருக்கான ஏலத்திலும் பங்கேற்கவில்லை. இதனால், வரும் ஐ.பி.எல்., தொடரில் புனே அணி பங்கேற்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


இதுகுறித்து பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் கூறியது:

ஐ.பி.எல்., பிரச்னையில் தங்களுக்கு தீங்கிழைக்கப்பட்டதாக சகாரா உணர்கிறது. சகாராவுடன் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. நல்ல நட்புணர்வு உள்ளதால், எதையும் பேசித்தீர்க்கத் தயாராக உள்ளோம். திறந்த மனதுடன் கூடிய சமரசத்தை எட்ட முயற்சிப்போம்.

அவர்களுடைய மனக்குறை எங்களுக்குத் தெரிகிறது. இதற்காக அனைத்தையும் உடனடியாக ரத்துசெய்வது சரியல்ல. இதுபோன்ற ஏற்ற இறக்கங்கள் எல்லாம் வரத்தான் செய்யும். இருவரும் சந்திக்கும் போது அனைத்தும் சரிசெய்யப்படும்.

இவ்வாறு சீனிவாசன் கூறினார்.


அவசரப்பட மாட்டோம்:

இதுகுறித்து பி.சி.சி.ஐ., துணைத் தலைவர் மற்றும் ஐ.பி.எல்., தலைவர் ராஜிவ் சுக்லா கூறியது:

சகாரா நிறுவனம் எங்களிடம் 11 ஆண்டுகளாக "ஸ்பான்சராக' உள்ளது. இதனால் எந்த பிரச்னை குறித்தும், திறந்த மனதுடன், பேசித் தீர்க்க தயராக உள்ளோம்.

இவ்விஷயத்தை பொறுத்தவரையில் அவசரப்பட்டு எவ்வித முடிவும் எடுக்கப்படப் போவதில்லை. புனே வாரியர்ஸ் அணி இன்னும் ஐ.பி.எல்., தான் உள்ளது. இதுகுறித்து எவ்வித கடிதமும் எங்களுக்கு வரவில்லை. நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

இவ்வாறு ராஜிவ் சுக்லா தெரிவித்தார்.


ரூ. 2234 கோடி இழப்பு:

சகாரா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து சுமூக தீர்வு எட்டப் படவில்லை என்றால், பி.சி.சி.ஐ.,க்கு ரூ. 2234 கோடி இழப்பு ஏற்படும். இதனால் உடனடியாக புதிய "ஸ்பான்ஷரை' தேட வேண்டிய கட்டாய நிலைக்கு பி.சி.சி.ஐ., தள்ளப்பட்டு உள்ளது.

0 comments:

Post a Comment