எவ்வளவு அடிச்சாலும் இந்திய அணி தாங்குறாங்க

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் தோல்வி தொடர்கிறது. நேற்று நடந்த முதல் "டுவென்டி-20' போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இளம் வீரர்களின் வரவும் பலன் அளிக்கவில்லை. மீண்டும் ஒருமுறை வென்ற ஆஸ்திரேலிய அணி, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வரிசையாக தோற்றது. அடுத்து இரண்டு "டுவென்டி-20' போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. முதல் போட்டி நேற்று சிட்னியில் நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, "பீல்டிங்' தேர்வு செய்தார்.


வார்னர் அதிரடி:

ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், வாடே இணைந்து நல்ல துவக்கம் தந்தனர். இவர்கள், இந்திய பந்துவீச்சை ஒருகை பார்த்தனர். வாணவேடிக்கை காட்டிய வார்னர், அஷ்வின் ஓவரில் 2 சிக்சர், பவுண்டரி விளாசினார். இவர், வினய் குமார் பந்தில் 25 ரன்களுக்கு வெளியேறினார். டிராவிஸ் பிர்ட்(17), அஷ்வின் "சுழலில்' வீழ்ந்தார்.


இன்னொரு "கில்லி':

தனது அதிரடியை தொடர்ந்த விக்கெட் கீப்பர் மாத்யூ வாடே, கில்கிறிஸ்ட்(செல்லமாக கில்லி) இல்லாத குறையை போக்கினார். ரவிந்திர ஜடேஜா ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த வாடே, "டுவென்டி-20' அரங்கில் தனது முதல் அரைசதம் அடித்தார். மறுமுனையில் டேவிட் ஹசியும் ரன் மழை பொழிய, ஸ்கோர் அதிவேகமாக உயர்ந்தது.


மழை பாதிப்பு:

ஆஸ்திரேலியா 131 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை பெய்தது. இதனால் ஆட்டம் 20 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. பின் மீண்டும் போட்டி துவங்கியது. வாடே (72), ரெய்னா பந்தில் போல்டானார். டேவிட் ஹசி (42), ராகுல் சர்மாவின் "சுழலில்' சரிந்தார். ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது.


விக்கெட் மடமட:

கடின இலக்கை துரத்திய இந்திய அணி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் சிதறியது. "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொதப்பினர். பிரட் லீ வீசிய முதல் ஓவரிலேயே சேவக் (4), காலியானார். காம்பிர்(20), டேவிட் ஹசியின் பந்தில் வீழ்ந்தார். இளம் வீரர்களான கோஹ்லி (22), ரெய்னாவும் (14) கைவிட்டனர். ஹாக் "சுழலில்' ரோகித் சர்மா "டக்' அவுட்டானார். ரவிந்திர ஜடேஜாவும்(7) தாக்குப்பிடிக்கவில்லை.


தோனி போராட்டம்:

பின் கேப்டன் தோனி, அஷ்வின் இணைந்து போராடினர். கிறிஸ்டியன், பிரட் லீ பந்துகளில் சிக்சர் அடித்து ஆறுதல் தந்தார் தோனி. இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 140 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. தோனி (48), அஷ்வின் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆட்ட நாயகன் விருதை வாடே தட்டிச்சென்றார்.

இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது "டுவென்டி-20' போட்டி மெல்போர்னில் நாளை நடக்க உள்ளது.

0 comments:

Post a Comment