பாண்டிங் வழியை பின்பற்றுவாரா சச்சின்?

சத சாதனையை இன்று நிகழ்த்துவார், அடுத்த போட்டியில் நிகழ்த்துவார் என்று ஒவ்வொரு போட்டியையும் எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு தொடர்ந்து ஒரு வருட காலமாக ஏமாற்றம் அளித்து வரும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் வழியை பின்பற்றி ஒருநாள் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற வேண்டும் என்ற முன்னணி வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்து, சச்சினின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்திருப்பதோடு மட்டுமல்லாது, கிரிக்கெட் உலகில் பெரும்பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில், 5 இன்னிங்சில் 18 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை, ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அதிரடியாக ஒருநாள் கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கியது.

இத்தொடரின் 2 போட்டிகளில் அவர் கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் கிரிக்கெட் அணியிலிருந்து ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டுள்ள நிலையில், ஒருநாள்போட்டிகளுக்கு குட்பை சொல்லியுள்ளார்.

ரிக்கி பாண்டிங் வழியை சச்சின் பின்பற்ற வேண்டும் என்று சிலரும், அவர் கிரிக்கெட்டிலிருந்தே ஓய்வு பெற வேண்டும் என்று கபில்தேவ் உள்ளிட்ட முன்னணி கிரிக்கெட் வீரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில், தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளதாவது, சச்சின் டெண்டுல்கர், ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற வேண்டும் என்றும், டெஸ்ட் போட்டிகளில் அவர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, கிரிக்கெட் வரலாற்றில், சச்சின் டெண்டுல்கர் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், கடந்த சிலகாலமாக, அவரது செயல்பாடு பாராட்டும்படியாக இல்லை. தற்போது நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் 5 போட்டிகளில் 90 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில், சச்சின் டெண்டுல்கர் இடம்பெறுவதன் மூலம், இளம்வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இது, இந்திய வீரர்களின் மனநிலையை பெரிதும் பாதிக்கிறது. சச்சின் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதன் மூலம், பல இளம்வீரர்கள் அணியில் இடம்பெற வழிவகை ஏற்படும். இது, இந்திய அணிக்கு செய்யும் மிகப்பெரிய உதவி ஆகும் என்று அவர் கூறியுள்ளார்.

சுனில் கவாஸ்கர் கூறுகையில், சச்சின் டெண்டுல்கருக்கு தக்க அறிவுரை கூற ஸ்ரீகாந்தால் மட்டுமே முடியும். ஸ்ரீகாந்த் தலைமையிலான அணியில், சச்சின் அறிமுகமானார் . ஸ்ரீகாந்த் தற்போது தேர்வுக்குழு கமிட்டியின் தலைவராக உள்ளார். எனவே, அவரால் மட்டுமே சச்சினுக்கு தக்க அறிவுரை கூறமுடியும் என்று தான் எண்ணுவதாக அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment