பிராட்மேனை விட சிறந்த வீரர் சச்சின்

கிரிக்கெட் அரங்கில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், ஆஸ்திரேலியாவின் பிராட்மேனை விட சிறந்தவர்,'' என, இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.

சமீபத்தில் குவாலியரில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சச்சின் இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் ஒரு நாள் அரங்கில் 200 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்தார்.

இவரது சாதனை குறித்து ஹர்பஜன் சிங் கூறியதாவது:

ஒருநாள் அரங்கில் முதல் இரட்டை சதமடித்து சாதனை படைத்த சச்சினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவரை பாராட்டிய சில வீரர்களை இவரை, பிராட்மேனுடன் ஒப்பிட்டனர். ஆனால், இவரது சாதனைகளை வைத்து பார்க்கும் பொழுது சச்சின், பிராட்மேனை விட சிறந்தவர் என்று தான் கூறவேண்டும்.

கிரிக்கெட் குறித்து மைதானம் மற்றும் "டிரஸிங் ரூமில்', இவரிடம் இருந்து நிறைய பாடங்களை கற்றுள்ளேன். ஒவ்வொரு போட்டிக்கும் இவர் எவ்வாறு தயாராகிறார் என்பதை அருகில் இருந்து பார்த்துள்ளேன்.

எனது தங்கையின் திருமணம் காரணமாக வரலாற்று சிறப்புமிக்க இப்போட்டியில் விளையாடாமல் போனது, ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும், இவரது சாதனையை எனது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டேன்.

ஐ.பி.எல்., போட்டியை தொடர்ந்து, வெஸ்ட் இண்டீசில் "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இதனால், ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் வீரர்கள், மிகுந்த கவனமுடன் விளையாடி, காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கடந்த 2007ல் வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறி ஏமாற்றியது. இம்முறை "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என நம்புகிறேன்.
இவ்வாறு ஹர்பஜன் கூறினார்.

"பேட்டிங் கடவுள்':

சரித்திரம் படைத்த சச்சினை, இலங்கை மீடியாக்கள் "பேட்டிங் கடவுள்' என புகழாரம் சூட்டியுள்ளது. இதுகுறித்து இலங்கையில் இருந்து வெளியான செய்தி: குவாலியர் போட்டியில் இரட்டை சதமடித்த சச்சின், ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை தீர்த்து வைத்தார்.

இவர் ஒவ்வொரு போட்டியில் களமிறங்கும் போது, ஏதாவது ஒரு சாதனையை பதிவு செய்கிறார். 36 வயதிலும், இவரது பேட்டிங் ஸ்டைலில் கடுகளவும் மாற்றம் இல்லை. இதனால் இவரை "பேட்டிங் கடவுள்' என்று கூறினால் மிகையாகாது. இவர் கிரிக்கெட் அரங்கில் மேலும் பல சாதனைகள் குவிக்க வாழ்த்துக்கள்.

இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

0 comments:

Post a Comment