இந்திய ஹாக்கியில் மீண்டும் புதிய பிரச்னை கிளம்பியுள்ளது. அணியின் கேப்டனாக யாரை தேர்வு செய்வது என்பதில், ஹாக்கி இந்தியா அமைப்பு மற்றும் பயிற்சியாளர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. என்ன காரணம்?: சமீபத்தில் சம்பள பிரச்னை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய இந்திய ஹாக்கி வீரர்கள் போராட்டத்தில் குதித்தனர். உலககோப்பை பயிற்சி முகாமை புறக்கணித்தனர். இப்பிரச்னையின் போது, அணியின் கேப்டனாக இருந்த ராஜ்பால் சிங், வீரர்களுக்கு ஆதரவாக செயல்பட வில்லை எனத் தெரிகிறது. இதன் காரணமாக ராஜ்பால் சிங்கின் மீதான நம்பிக்கையை வீரர்கள் இழந்து விட்டனர். இதனால் அவர் உலககோப்பையில் கேப்டனாக நீடிப்பதை வீரர்கள் விரும்பவில்லை. இது ஒரு புறம் இருக்க, 10 ஆண்டுகளாக இந்திய ஹாக்கி அணி சார்பாக விளையாடி வரும் பிரப்ஜோத் சிங், தனக்கு கேப்டன் பொறுப்பு வழங்க வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
யாருக்கு கேப்டன் பதவி?
உலககோப்பை ஹாக்கி தொடர் வரும் 28 ம் தேதி முதல் மார்ச். 13 வரை இந்தியாவில் நடக்க உள்ளது. தொடருக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் இந்திய ஹாக்கியில் புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. உலககோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த 6ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இதில், கேப்டனாக ராஜ்பால் சிங்கை நியமித்தது ஹாக்கி இந்தியா அமைப்பு. ஆனால் இதற்கு அணியின் பயிற்சியாளர் ஜோஸ் பிராசா மற்றும் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. பிரப்ஜோத் சிங்கை புதிய கேப்டனாக நியமிக்க வேண்டும் என்பதே அவர்களது விருப்பமாக உள்ளது. இதனால் பயிற்சியாளர், ஹாக்கி இந்தியா அமைப்பு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment