ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பு "401'

ஒருநாள் போட்டியில் 200 ரன்களை கடந்து சாதித்தது போன்று, டெஸ்ட் கிரிக்கெட்டில் 401 ரன்கள் எடுத்து, வெஸ்ட்இண்டீசின் லாராவின் (400*) சாதனையை, சச்சின் தகர்க்க வேண்டும் என்பது தான், ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்திய கிரிக்கெட்டின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (36). 442 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, 17598 ரன்கள் குவித்துள்ள இவர், முதல் வீரராக 200 ரன்களை கடந்து (முந்தைய சாதனை, 194 ரன்கள்) சாதித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள், அதிக சதம் (46) எடுத்துள்ள வீரர்களில் முதலிடம் வகிக்கிறார்.

டெஸ்டில் "401':

தான் பங்கேற்ற 166 டெஸ்டில் சச்சின், 46 சதத்தின் உதவியுடன் இதுவரை 13447 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக வங்கதேசத்துக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 248* ரன்கள் எடுத்துள்ளார்.

டெஸ்டில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் குவித்து சாதித்துள்ள சச்சின், ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீசின் லாராவின் (400*) சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இப்போது எழுந்துள்ளது.

"நூற்றுக்கு நூறு':

இவை தவிர சச்சின், சத்தமில்லாமல் மற்றொரு சாதனையையும் நெருங்கிக் கொண்டுள்ளார். அதாவது ஒருநாள் (46) மற்றும் டெஸ்ட் (47) என இரண்டையும் சேர்த்து, இதுவரை 93 சதம் அடித்துள்ள சச்சின், விரைவில் இதிலும் சதம் (100) கடக்கவுள்ளார்.

இதுபோல 93 ஒருநாள் அரைசதம் அடித்துள்ள சச்சின், 100வது அரைசதத்தையும் விரைவில் எட்டுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

விரைவில் எட்டலாம்:

இந்த ஆண்டு (2010) துவங்கி பிப்ரவரி 26 வரை, டெஸ்டில் 4, ஒருநாள் போட்டியில் ஒன்று, என மொத்தம் ஐந்து சதம் அடித்துள்ளார். இதே வேகத்தில் சென்றால் எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் 100 க்கு 100 கடந்து விடுவார்.

சேவக் வாய்ப்பு:

சச்சினின் 200 ரன், சாதனையை தற்போதுள்ள வீரர்களில் யாரால் முறியடிக்க முடியும் என பார்த்தால், நமது சேவக் தான் முன்னிலையில் இருக்கிறார். அதிரடி துவக்கவீரர் என்பதால், இவருக்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறுகிறார்கள்.

இரண்டாவதாக "சிக்சர் மன்னன்' யுவராஜ் சிங் பெயர் அடிபடுகிறது. தனது சாதனயை சச்சினே தகர்த்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றும் கிரிக்கெட் நிபுணர்கள் கணிக்கின்றனர்.

0 comments:

Post a Comment