டி20 உலகக் கோப்பை: 30 பேர் கொண்ட உத்தேச இந்திய அணி தேர்வு

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் என்.ஸ்ரீனிவாசன் வியாழக்கிழமை இதை அறிவித்தார்.

மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள கயானா, பார்படாஸ் மற்றும் செயின்ட் லூசியா ஆகிய இடங்களில் ஏப்ரல் 30ம் தேதி முதல் மே 16ம் தேதி வரை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்கும் வீரர்களைத் தேர்வு செய்வதற்காக தேர்வுக் கமிட்டியின் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு புதுமுக வீரர்கள் உள்பட 30 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது.

கர்நாடகத்தைச் சேர்ந்த இளம் வீரர்கள் மணீஷ் பாண்டே, ஆர்.வினய் குமார் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான நமன் ஓஜா ஆகிய புதுமுகங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மணீஷ் பாண்டே அண்மையில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடி தேர்வுக் கமிட்டியினரின் பார்வையில் இடம்பெற்றவர். இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றவர். வினய் குமாரும் உள்ளூர் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

விக்கெட் கீப்பராக உள்ள நமன் ஓஜா, சிறந்த பேட்ஸ்மேனும்கூட. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் ஓஜா உள்பட தோனி மற்றும் ரித்திமான் சாஹா என மூன்று விக்கெட் கீப்பர்கள் இடம்பெற்றுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.பி.சிங், பியூஷ் சாவ்லா மற்றும் பந்துவீச்சாளர் முனாஃப் படேல் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். எனினும் போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் இறுதிப் பட்டியல் பின்னர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அணி விவரம்: எம்.எஸ். தோனி, சேவாக், கம்பீர், தினேஷ் கார்த்திக், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், பிரவீண் குமார், ஸ்ரீசாந்த், அபிஷேக் நாயர், சுதீப் தியாகி, ரோஹித் சர்மா, ஆஷிஸ் நெஹ்ரா, இஷாந்த் சர்மா, ரித்திமான் சாஹா, நமன் ஓஜா, பியூஷ் சாவ்லா, அபிமன்யு மிதுன், மணீஷ் பாண்டே, ஆர்.பி.சிங், முனாஃப் படேல், முரளி விஜய், வினய் குமார், அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா, விராட் கோலி, ஆர்.அஸ்வின்.

0 comments:

Post a Comment