கைமாறுகிறது ஐ.பி.எல்., அணிகள்

ஐ.பி.எல்., அணிகளின் உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதால், தங்களது அணிகளை விற்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) சார்பில் "டுவென்டி-20' தொடர் நடத்தப்படுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த ஆண்டு பாதுகாப்பு பிரச்னை காரணமாக இரண்டாவது தொடர், தென் ஆப்ரிக்காவில் நடந்தது.

தொடரும் பிரச்னை: தற்போது மூன்றாவது தொடர் வரும் மார்ச் 12ம் தேதி இந்தியாவில் துவங்குகிறது. இந்த முறையும் பிரச்னைகள் தொடருகின்றன. ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்களை எந்த அணியும் எடுக்கவில்லை.

இந்த சர்ச்சை முடிவதற்குள் தெலுங்கானா போராட்டம் காரணமாக ஐதராபாத்தில் நடக்க இருந்த போட்டிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த ஆந்திர அரசு, தொடரை புறக்கணிக்குமாறு தங்களது டெக்கான் அணியை வலியுறுத்தி வருகிறது.


லாபம் இல்லை: இப்படி சர்ச்சைகள் துரத்துவதால் அணிகளின் உரிமையாளர்களுக்கு லாபம் எதுவும் கிடைக்கவில்லை. கடந்த முறை போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடத்தப்பட்டதால் ஒவ்வொரு அணிக்கும் 30 முதல் 35 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்க, தங்களது அணியை விற்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். சிலர் பெரும்பாலான பங்குகளை விற்க முன்வந்துள்ளனர். பாலிவுட் நடிகை பிரித்தி ஜிந்தாவின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை ஹீரோ ஹோண்டா நிறுவனம் வாங்க திட்டமிட்டது. இதனை பிரித்தி ஜிந்தா மறுத்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை "எமர்ஜிங் மீடியா' நிறுவனம் 312 கோடி ரூபாய்க்கு வாங்கியது. தற்போது ஆயிரத்து 160 கோடி ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டில்லி அணியை ஜி.எம்.ஆர்., ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 395 கோடி ரூபாய்க்கு வாங்கியது. தற்போது ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு கொடுக்கு தயாராக இருக்கிறதாம்.

டில்லி டேர்டெவில்ஸ் அணியின் 30 சதவீத பங்குகளை வாங்க "ஹீரோ ஹோண்டா' நிறுவனம் தயாராக உள்ளதாம். ஐ.பி.எல்., அணிகளை வாங்க சஹாரா இந்தியா, கோத்ரெஜ், ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் போட்டியிடுகின்றன.


மோடி தந்திரம்: தற்போது யாரும் அணிகளை விற்க முடிவு செய்யவில்லையாம். மூன்றாவது தொடரை விளம்பரப்படுத்தும் நோக்கில், இது போன்ற செய்திகளை ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி வேண்டுமென்றே கிளப்புவதாகவும் கூறப்படுகிறது

0 comments:

Post a Comment