திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை

உள்ளூர் கிரிக்கெட் அணிகளில், தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை. இதனால் எதிர்காலத்தில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் பற்றாக்குறை ஏற்படலாம்,'' என, லட்சுமண் தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி வீரர் லட்சுமண். இதுவரை 109 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 6993 ரன்கள் குவித்துள்ளார். அனுபவ வீரரான இவர், இந்திய அணிக்கு திறமையான சுழற்பந்து வீச்சாளர் தேவை என தெரிவித்துள்ளார்.

இது குறித்து லட்சுமண் கூறியது: இந்திய அணியின் தற்போதைய சுழற்பந்து வீச்சு பாராட்டும் படியாக உள்ளது. ஆனால் இனி வரும் காலங்களில், நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இந்திய அணியில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஏனெனில் உள்நாட்டு கிரிக்கெட் அணிகளில், திறமையான சுழற்பந்து வீச்சாளர்களை பார்க்க முடியவில்லை. இது அணிக்கு பெரும் பாதிப்பாக அமையும் என கருதுகிறேன்.

பேட்டிங் பலம்: பேட்டிங்கை பொறுத்த வரை, சுரேஷ் ரெயனா, ரோகித் சர்மா உள்ளிட்ட இளம் வீரர்கள் அசத்தி வருகின்றனர். ஐதராபாத் வீரர் அம்பாட்டி ராயுடு திறமையான அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வருவார் என எதிர்பார்க்கிறேன்.

கர்நாடகா அணியில் பல வீரர்கள் அசத்தி வருவதாக, டிராவிட்டும் தெரிவித்துள்ளார். இதனால் அணியின் பேட்டிங் வரிசை எதிர்காலத்திலும் பலமாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ஆபத்து இல்லை: "டுவென்டி-20' போட்டிகளின் அசுர வளர்ச்சியால், டெஸ்ட் போட்டிகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை. பாரம்பரியமிக்க இவ்வகை போட்டிகளில் விளையாடவே, இளம் வீரர்கள் விரும்புகின்றனர்.

ஏனெனில் வீரர்களின் உண்மையான திறனை வெளிப்படுத்துவது டெஸ்ட் போட்டிகள் தான். ஒரு நாள் போட்டிகளுக்கு தான், தற்போது ஆபத்து. இவ்வாறு லட்சுமண் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment