நாடு முழுவதும் ஆயிரம் சினிமா தியேட்டர்களில் ஐ.பி.எல்., போட்டிகள் காண்பிக்கப்பட உள்ளன. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பாக இருப்பதால், மைதானத்தில் அமர்ந்து போட்டியை காணும் உணர்வினை ரசிகர்கள் பெறலாம்.
இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) சார்பில் மூன்றாவது "டுவென்டி-20' தொடர், வரும் மார்ச் 12 முதல் ஏப்., 25ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் உள்ள 60 போட்டிகளும், சினிமா தியேட்டரில் காண்பிக்கப்பட இருக்கிறது.
"3டி' ஜாலம்:
"அவதார்' படத்தை தொடர்ந்து பைனல் உட்பட சில போட்டிகளை "3 டி' மூலம் காண்பிக்கும் திட்டமும் உண்டு. இதற்கான ஏற்பாடுகளை யு.எப்.ஒ., மூவிஸ் நிறுவனம் செய்து வருகிறது. இது குறித்து, இதன் இணை இயக்குனர் கபில் அகர்வால் கூறியது:
உலகில் மிகவும் பிரபலமான ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் இந்தியாவின் 9 நகரங்களில் மட்டுமே நடத்தப்படுகிறது. எனவே, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக, தியேட்டர்களில் நேரடியாக ஒளிபரப்ப உள்ளோம். மிகப் பிரமாண்டமான திரையில் போட்டிகள் காண்பிக்கப்படும்.
விளம்பரம் "நோ':
முக்கியமாக விளம்பரங்களின் தொல்லை இல்லாமல் போட்டிகளை காணலாம். தைமானத்தை போல நடன பெண்களின் ஆட்டமும் இடம் பெறும். பொதுவாக ஐ.பி.எல்., போட்டிகளின் போது திரைப்படங்கள் "ரிலீஸ்' செய்யப்படுவதில்லை. இதனால் ஏற்படும் நஷ்டத்தை கிரிக்கெட் ஒளிபரப்பு மூலம் ஈடு செய்யலாம்.
இவ்வாறு கபில் அகர்வால் கூறினார்.
சண்டை இல்லை
ஐ.பி.எல்., போட்டிகள் தியேட்டரில் ஒளிபரப்பாக இருப்பதால், வீட்டில் சண்டை தவிர்க்கப்படுகிறது. இனி, பெண்கள் தங்களுக்கு விருப்பமான "மெகா' தொடர்களை "டிவியில்' எவ்வித இடையூறும் இல்லாமல் பார்க்கலாம். ஆண்கள் தியேட்டருக்கு சென்று ஐ.பி.எல்., போட்டிகளை காணலாம்.
0 comments:
Post a Comment