ஸ்டைன் வேகத்தில் இந்தியா பரிதாபம்

தென் ஆப்ரிக்க வீரர் டேல் ஸ்டைன் வேகத்தில், நிலைதடுமாறிய இந்திய அணி, நாக்பூர் டெஸ்டின் முதல் இன்னிங்சில் "பாலோ-ஆன்' பெற்றது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கப் போராடி வருகிறது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி நாக்பூர், விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி, 6 விக்கெட் இழப்புக்கு 558 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது.

அடுத்து ஆடிய இந்திய அணி 2 ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்து இருந்தது.

"டாப் ஆர்டர்' ஏமாற்றம்: நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. நேற்றைய ரன்னுடன் மேலும் ரன் எதுவும் சேர்க்காத நிலையில் காம்பிர் (12), மார்கல் பந்தில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். பின் வந்த முரளி விஜய் (4), தன் பங்குக்கு ஒரு பவுண்டரி மட்டும் அடித்து விட்டு, ஸ்டைனின் பந்தில் போல்டானார்.

சேவக் சதம்: அடுத்து சேவக்குடன் ஜோடி சேர்ந்த சச்சின், அணியை மீட்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவரும், 7 ரன்னுடன் திரும்பினார். பின் பத்ரிநாத், சேவக் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சேவக், சர்வதேச டெஸ்ட் அரங்கில் 18 வது சதம் கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்த நிலையில், 109 ரன்கள் (15 பவுண்டரி) எடுத்திருந்த சேவக் அவுட்டானார்.

பத்ரிநாத் ஆறுதல்: தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பத்ரிநாத், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிதானமாக விளையாடிய இவர், சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது முதல் அரைசதம் கடந்தார். தேநீர் இடைவேளையின் போது இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்து இருந்தது.


12 ரன்னுக்கு 6 விக்.,: இந்நிலையில் ஹாரிசின் அபாரமான சுழலில், கேப்டன் தோனி (6), அவுட்டானார். இதன் பின் இந்திய அணியின் வீழ்ச்சி துவங்கியது. ஸ்டைன் பவுலிங்கில், அனல் பறந்தது. இவரது வேகப்பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாத இந்திய வீரர்கள் ஒருவர் பின், ஒருவராக பெவிலியன் திரும்பினர்.

பத்ரிநாத் (56), சகா (0), ஜாகிர் கான் (2), அமித் மிஸ்ரா (0), ஹர்பஜன் சிங் (8) என வரிசையாக அவுட்டாயினர். கடைசி 12 ரன்கள் எடுப்பதற்குள், 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி "பாலோ-ஆன்' பெற்றது.

தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் 7 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 325 ரன்கள் பின்தங்கி இருந்த இந்திய அணியை, தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித், மீண்டும் "பேட்டிங்' செய்ய அழைத்தார்.


மீண்டும் சொதப்பல்: இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு மீண்டும் ஏமாற்றம். காம்பிர் (1), இம்முறையும் சொதப்பினார். சேவக், 16 ரன்னுக்கு வெளியேறினார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்திருந்தது. சச்சின் (15), முரளி விஜய் (27) அவுட்டாகாமல் இருந்தனர்.


போராட்டம்: தற்போது இந்திய அணி 259 ரன்கள் பின்தங்கியுள்ளது. இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில், கைவசம் 8 விக்கெட்டுகள் மட்டும் வைத்துள்ள இந்திய அணி, தென் ஆப்ரிக்க அணியின் பிடியில் இருந்து தப்புவது மிகவும் கடினமே.


--------
சிறந்த பந்து வீச்சு

நேற்று இந்திய அணிக்கு எதிராக 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் வீழ்த்திய, தென் ஆப்ரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டைன், சர்வதேச கிரிக்கெட் அரங்கில், தனது மிகச்சிறந்த பந்து வீச்சை பதிவு செய்தார். இதுவரை 37 டெஸ்டில் பங்கேற்றுள்ள இவர், 13 வது முறையாக ஐந்து விக்கெட்டும், அதற்கு மேலும் கைப்பற்றியுள்ளார்.

அசார் சாதனை சமன்

இந்திய கிரிக்கெட் வீரர் சேவக், நேற்று தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக, நான்காவது சதம் அடித்தார். இதன்மூலம் முன்னாள் இந்திய வீரர் அசாருதினின் (4 சதம், எதிர்-தென் ஆப்ரிக்கா) சாதனையை சமன் செய்தார். இதற்கு முன் சேவக், கடந்த 2001ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அறிமுகமான புளோயம்போன்டைன் டெஸ்டில் சதம் (105) அடித்தார். பின் கான்பூர் (165 ரன், 2004 ), சென்னை (319, 2008) டெஸ்டில் சதம் கடந்து இருந்தார்.

"ஆல்- அவுட்' ரகசியம்

நேற்றைய போட்டி குறித்து தென் ஆப்ரிக்க வீரர் ஸ்டைன் கூறியது: ஆடுகளத்தில் சரியான இடத்தில் பவுலிங் செய்து, விக்கெட்டுகளை வீழ்த்த நினைத்திருந்தோம். இந்நிலையில் தேநீர் இடைவேளையின் போது பந்தின் தையல் பிரிந்து இருந்தது. பின் மீண்டும் பவுலிங் செய்த போது, பிரிந்த இடத்தில் முடிச்சு போடப்பட்டு இருந்தது.

இதை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டோம். இந்திய அணி ஆல் அவுட்டான பின், பவுலர்கள் நலன் கருதி, ஸ்மித் இந்தியாவுக்கு "பாலோ-ஆன்' கொடுக்கத் தயங்கினார். ஆனால் நாங்கள், தொடர்ந்து பந்து வீச தயாராக இருந்தோம். எப்படியும் இன்னும் இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி விடலாம் என கேப்டனிடம் உறுதியளித்த பின் தான், இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

இவ்வாறு ஸ்டைன் கூறினார்.

வெற்றிக்கு போராடுவோம்

நாக்பூரில் நடக்கும் டெஸ்ட் போட்டி குறித்து இந்திய வீரர் சேவக் கூறுகையில்,"" தேநீர் இடைவேளைக்குப் பின் பந்தின் தன்மை மாறி விட்டது. இதைப் பயன்படுத்திக் கொண்ட தென் ஆப்ரிக்க வீரர் டேல் ஸ்டைன், "ரிவர்ஸ்விங்' செய்து விக்கெட் வேட்டை நடத்தி விட்டார்.

இதற்கு முன், கடந்த 2001ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் "பாலோ-ஆன்' பெற்று பின் வெற்றிபெற்றோம். அதுபோல இங்கும் வெற்றி பெற முயற்சிப்போம். அனுபவ வீரர் சச்சின், முரளி விஜய் மற்றும் பல பேட்ஸ்மேன்கள் உள்ள நிலையில் வெற்றிக்கு போராடுவோம்,'' என்றார்

0 comments:

Post a Comment