இந்தியாவை விரட்டினார் அப்ரிதி - கடைசி ஓவர் வரை டென்ஷன்

ஆசிய கோப்பை பரபரப்பான லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. கடைசி ஓவரில் இரண்டு சிக்சர் அடித்த அப்ரிதி, வெற்றி இலக்கை விரட்ட கைகொடுத்தார். தவிர, இந்தியாவின் பைனல் கனவுக்கும் வேட்டு வைத்தார்.
வங்கதேசத்தில் 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த 6வது லீக் போட்டியில் ‘பரம எதிரிகளான’ இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில், ஸ்டுவர்ட் பின்னி நீக்கப்பட்டு, அமித் மிஸ்ரா சேர்க்கப்பட்டார். 


தவான் ஏமாற்றம்:

இந்திய அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. முகமது ஹபீஸ் பந்தில் ஷிகர் தவான் (10) வீழ்ந்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இன்னொரு ‘அடி’ விழுந்தது. இம்முறை கேப்டன் விராத் கோஹ்லி (5), குல் ‘வேகத்தில் அவுட்டானார். 

பின் ரோகித் சர்மா, ரகானே சேர்ந்து அணியை மீட்கும் முயற்சியில் இறங்கினர். ஜூனைடு கான், குல் பந்துவீச்சில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்ட ரோகித் (56) ஒருநாள் அரங்கில் தனது 22வது அரைசதத்தை பூர்த்தி செய்து அவுட்டானார். 


தல்ஹா அசத்தல்:

அடுத்து வந்த தினேஷ் கார்த்திக், ரகானே சேர்ந்து ஆமை வேக ஆட்டத்தை வெளிப்படுத்த ரன் வேகம் அப்படியே குறைந்தது. அறிமுக பவுலர் தல்ஹா வேகத்தில் ரகானே 23 ரன்களுக்கு(50 பந்துகள்) அவுட்டானார். சிறிது நேரத்தில் கார்த்திக்கும் (23) நடையை கட்டினார். தோனியும் இல்லாததால் அணியின் ஸ்கோர் உயர வாய்ப்பு இல்லாமல் போனது.

கடைசி கட்டத்தில் அம்பதி ராயுடு, ரவிந்திர ஜடேஜா ஜோடி விரைவாக ரன் சேர்த்தது. அப்ரிதி பந்தை சிக்சருக்கு அனுப்பிய ராயுடு (58), அரைசதம் கடந்து வெளியேறினார். 

உமர் குல் வீசிய போட்டியின் 48வது ஓவரில் அஷ்வின் 2 பவுண்டரி, ஜடேஜா ஒரு சிக்சர் அடித்தனர். சயீத் அஜ்மல் ‘சுழலில்’ அஷ்வின் (9), ஷமி (0) அவுட்டாகினர். இந்திய அணி 50 ஓவர் முடிவில், 8 விக்கெட்டுக்கு 245 ரன்கள் எடுத்தது. ஒருநாள் அரங்கில் தனது 9வது அரைசதம் அடித்த ஜடேஜா (52), மிஸ்ரா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

பாகிஸ்தான் அணிக்கு அஜ்மல் அதிகபட்சமாக 3 விக்கெட் சாய்த்தார்.


நல்ல துவக்கம்:

எட்டக்கூடிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு ஷார்ஜீல் (25), ஷேசாத் (42) ஜோடி நல்ல அடித்தளம் கொடுத்தது. மிஸ்பா (1) ரன் அவுட்டானார். பின் வந்த உமர் அக்மலை (4) மிஸ்ரா ‘பெவிலியனுக்கு’ அனுப்ப, பாகிஸ்தான் அணி, 113 ரன்களுக்கு 4 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது.

பின் வந்த சோயப் மக்சூத் கைகொடுக்க, பாகிஸ்தான் அணி சீராக முன்னேறியது. அஷ்வின் பந்தில் ஹபீஸ்(75) அவுட்டானார். சோயப்(38) ரன் அவுட்டாக, லேசான பதட்டம் ஏற்பட்டது. ஆனாலும், ஜடேஜா வீசிய அடுத்த ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த அப்ரிதி, இந்திய அணிக்கு ‘செக்’ வைத்தார். 


அப்ரிதி அதிரடி:

கடைசி ஓவரில் இந்திய வெற்றிக்கு 2 விக்கெட் தேவைப்பட்டது. பாகிஸ்தான் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டன. அஷ்வின் பந்துவீசினார். முதல் பந்தில் சயீத் அஜ்மல்(0) போல்டானார். இரண்டாவது பந்தில் ஜூனைத் கான் ஒரு ரன் எடுத்தார். 3வது பந்தில் அப்ரிதி ஒரு இமாலய சிக்சர் அடித்து, இந்திய ரசிகர்களின் இதயங்களை நொறுக்கினார். 4

வது பந்தையும் சிக்சருக்கு அனுப்பிய இவர், வெற்றியை உறுதி செய்தார். பாகிஸ்தான் அணி 49.4 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் பைனலுக்கு அனேகமாக முன்னேறியது. அப்ரிதி(18 பந்தில் 34 ரன், 2 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தார். ஆட்டநாயகன் விருதை ஹபீஸ் தட்டிச்சென்றார்.

0 comments:

Post a Comment