டுவென்டி 20 உலக கோப்பையில் விறுவிறு

டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் கேப்டன் தோனி, ரெய்னா, யுவராஜ் சிங், ரவிந்திர ஜடேஜா அடங்கிய நால்வர் கூட்டணி, இந்திய அணிக்கு வெற்றி தேடித்தரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஐந்தாவது ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர், வரும் மார்ச் 16ல் வங்கதேசத்தில் துவங்குகிறது.

இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும். குரூப் 1ல் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், குரூப் 2ல் இலங்கை, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் உள்ளன.

தவிர, மார்ச் 16 முதல் 21ம் தேதி வரை நடக்கும் தகுதிச் சுற்றில் மோதும் 8 அணிகளில் இருந்து, 2 அணிகள் முக்கிய சுற்றுக்கு தேர்வு பெறும்.

இந்திய அணியை பொறுத்தவரையில் சமீபத்திய ஆசிய போட்டியில், பைனலுக்கு முன்னேறவில்லை. இருப்பினும், ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கு கேப்டன் தோனி, யுவராஜ், ரெய்னா அணிக்கு திரும்புவது நம்பிக்கை அளிக்கிறது.

‘டுவென்டி–20’ போட்டிகளில் இந்த மூவரும் ‘ஸ்பெஷலிஸ்ட்கள்’. கடந்த 2007ல் நடந்த தொடரில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 6 சிக்சர் அடித்து அசத்தியவர் யுவராஜ். 

கடைசியாக பங்கேற்ற பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான ‘டுவென்டி–20’ போட்டிகளில் 72, 77 ரன்கள் எடுத்துள்ளார்.


ரெய்னா எப்படி:

யுவராஜ் சிங்கிற்கு அடுத்து ‘டுவென்டி–20’ போட்டியில் ‘ஸ்பெஷலிஸ்ட்’ ரெய்னா தான்.  பிரிமியர் கிரிக்கெட் அரங்கில் அதிக ரன்கள் (99 போட்டி, 2,802 ரன்கள்) எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்த அனுபவம் உலக கோப்பை தொடரிலும் கைகொடுக்கலாம்.


சபாஷ் கேப்டன்:

கடந்த 2007ல் முதல் ‘டுவென்டி–20’ உலக கோப்பையை வென்று காட்டியவர் தோனி. பேட்டிங்கில் கடைசி வரை இருந்து ‘பினிஷிங்’ செய்வதில் கெட்டிக்காரர்.

சமீபத்திய தொடர் தோல்விகள், சூதாட்ட சர்ச்சைகளில் இருந்து மீள, இத்தொடரில் கோப்பை வென்று திரும்புவார் என நம்பப்படுகிறது.


ஜடேஜாவுக்கும் இடம்:

இவர்களுடன் ரவிந்திர ஜடேஜாவும் கைகொடுக்கலாம். சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் பெரியளவில் சாதிக்கவில்லை என்ற போதும், பிரிமியர் தொடரில் அசத்தியுள்ளார்.   வங்கதேசத்தில் உள்ள ஆடுகளங்கள் சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதால், இவர் விக்கெட் வேட்டை நடத்தலாம்.


ஹாட்ரிக்’ கோப்பை

இந்திய அணிக்கு 50 ஓவர் போட்டிகளில் கடந்த 2011ல் உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி என, அடுத்தடுத்த ஐ.சி.சி., தொடரில் கோப்பை வென்று தந்தவர் கேப்டன் தோனி. வரும் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் சாதிக்கும் பட்சத்தில், ‘ஹாட்ரிக்’ பட்டம் வென்ற ஒரே சர்வதேச கேப்டன் என்ற பெருமை பெறலாம்.


சத்தமில்லாத சாதனை

‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில்  கேப்டனாக இருந்தது, அதிக வெற்றிகள் பெற்றவர்களில் முதலிடம் தோனிக்குத் தான். இதுவரை 22 போட்டிகளில் கேப்டனாக இருந்து, 12 வெற்றி பெற்றார்.

இங்கிலாந்தில் கோலிங்வுட் (17 ல், 8 வெற்றி), தென் ஆப்ரிக்காவின் ஸ்மித் (16ல் 11 வெற்றி), இலங்கையின் சங்ககரா (14ல் 10 வெற்றி) உள்ளிட்டோர், அடுத்த 3 இடங்களில் உள்ளனர். 


‘மார்ச் 14’

‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கான தோனி தலைமையிலான இந்திய அணி, வரும் 14 ம் தேதி வங்கதேசம் புறப்பட்டு செல்கிறது. தாகா சென்றடைந்ததும், பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


அணி விவரம்:

தோனி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, ரெய்னா, யுவராஜ் சிங், ரகானே, ஜடேஜா, அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா, மோகித் சர்மா, வருண் ஆரோன்.

0 comments:

Post a Comment