
பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் கோல்கட்டா அணியை வாங்குவது தொடர்பாக கங்குலி, நடிகர் ஷாருக்கான் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, 41. கடந்த 2008ல் இந்தியன் பிரிமியர் லீக் துவக்கப்பட்ட போது, பாலிவுட் நடிகர் ஷாருக்கானின், 48, கோல்கட்டா அணியில் இடம் பெற்றார்.
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கோல்கட்டா அணியில் இருந்து கங்குலி நீக்கப்பட்டார். பின், 2011ல் புனே அணியில் இடம் பெற்றார். தற்போது பிரிமியர் தொடரில் பங்கேற்கவில்லை.
சிறுவயதில் கிரிக்கெட் தேர்வு செய்வதற்கு முன், கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருந்தவர் கங்குலி. இந்தச்சூழலில், பிரிமியர் கிரிக்கெட் போல, இந்தியாவில் பிரிமியர் கால்பந்து தொடர் வரும் செப்டம்பரில் நடக்கவுள்ளது.
மும்பை, கோல்கட்டா, டில்லி, பெங்களூரு, சென்னை, கவுகாத்தி, கோவா, கொச்சி உட்பட 9 நகரங்களை அடிப்படையாக கொண்டு, கால்பந்து அணிகள் இடம் பெறவுள்ளன.
இந்த அணிகள் 10 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் விற்கப்படும். ஒவ்வொரு அணிக்கும் அடிப்படை விலை, ரூ. 120 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கங்குலி ஆர்வம்: இதில் கோல்கட்டா அணியை வாங்குவதில் கங்குலி ஆர்வம் காட்டுகிறார். இதற்காக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) தலைவர் பிரபுல் படேலை சந்தித்து, தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
ஷாருக் போட்டி:
அதேநேரம், பிரிமியர் கிரிக்கெட் தொடரில் கோல்கட்டா அணியை தன்வசம் வைத்துள்ள ஷாருக்கான், கோல்கட்டா கால்பந்து அணியையும் வாங்க திட்டமிட்டுள்ளார். இதை ஏ.ஐ.எப்.எப்., துணைத்தலைவர் சுப்ரட்டோ தத்தா உறுதி செய்தார்.
ஏற்கனவே, பிரிமியர் அணி தொடர்பாக கங்குலி–ஷாருக் இடையே பிரச்னை உள்ளது. தற்போது கால்பந்து அணியை வாங்க இருவரும் கோதாவில் இறங்கியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அணியை வாங்கியவர்கள் விவரம் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும். அப்போது, கோல்கட்டா அணி யாருக்கு சொந்தம் என்பது தெரிய வரும்.
0 comments:
Post a Comment