எது சிறந்த வெற்றிக்கூட்டணி - சோதிக்க தோனிக்கு வாய்ப்பு

டுவென்டி-20’ உலக கோப்பை பயிற்சி போட்டியில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில், இந்திய அணிக்கான வெற்றிக்கூட்டணியை கண்டறிய கேப்டன் தோனி முயற்சிக்கலாம்.

ஐந்தாவது ‘டுவென்டி-20’ உலக கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. இதில் ‘பிரிவு–2’ல் இடம்பெற்றுள்ள இந்திய அணி வரும் 21ம் தேதி ‘பரம எதிரியான’ பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதற்கு முன்னதாக இன்றைய பயிற்சி போட்டியில் இலங்கையுடன் மோதுகிறது.   
                
அன்னிய மண்ணில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறது. சமீபத்தில் கோஹ்லி தலைமையில் ஆசிய கோப்பை தொடரிலும்  ‘அடி’ வாங்கியது. தற்போது தோனி, யுவராஜ், ரெய்னா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் திரும்பியுள்ள நிலையில், உலக கோப்பை ‘டுவென்டி–20’ தொடரில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

இன்றைய இலங்கைக்கு எதிரான பயிற்சி போட்டியில் அனைத்து 15 வீரர்களையும் பயன்படுத்தலாம். இதன் மூலம், எது சிறந்த வெற்றிக்கூட்டணி என்பதை கேப்டன் தோனி கண்டறியலாம். முதலில் சரியான துவக்க ஜோடியை தேர்வு செய்ய வேண்டும். 

ரோகித் சர்மா தொடர்ந்து சொதப்புவதால், பிரிமியர் தொடரில் துவக்க வீரராக களமிறங்கிய அனுபவம் உள்ள ரகானேவை தவானுடன் சேர்த்து களமிறக்கலாம். 

ரெய்னா பலம்: ‘மிடில்–ஆர்டரில்’ ‘டுவென்டி–20’ ‘ஸ்பெஷலிஸ்ட்’ விராத் கோஹ்லி, யுவராஜ், ரெய்னா பலம் சேர்ப்பர். இத்தொடரில் சதம் அடித்த பெருமைமிக்க ரெய்னா, பயிற்சி வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

கடைசி கட்டத்தில் தோனி கைகொடுக்கலாம். அம்பதி ராயுடு, ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் வாய்ப்பை வீணாக்கக் கூடாது.

பழிதீர்க்குமா: பந்துவீச்சு தான் பெரும் பிரச்னையாகவே உள்ளது. முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், மோகித் சர்மா உள்ளிட்ட ‘வேகங்கள்’ கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்குகின்றனர். 

இதையடுத்து இந்தியாவின் அதிவேகப்பந்துவீச்சாளரான வருண் ஆரோனை சோதித்து பார்க்கலாம். இவர் தொடர்ந்து சிறப்பாக செயல்படாதது பின்னடைவான விஷயம்.‘சுழலில்’ அஷ்வின், ரவிந்திர ஜடேஜா அசத்தினால், சமீபத்திய ஆசிய கோப்பை லீக் போட்டியில் இலங்கையிடம் சந்தித்த தோல்விக்கு இந்தியா பழிதிர்க்கலாம்.

இளம் கேப்டன்: இலங்கை அணியை பொறுத்தவரை ஆசிய கோப்பை வென்ற உற்சாகத்தில் உள்ளது. சம்பள பிரச்னை காரணமாக, முதல் தர வீரர்கள் பங்கேற்பது சந்தேகம். இளம் கேப்டன் சண்டிமால் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இவருக்கு ஜெயவர்தனா, சங்ககராவின் அனுபவம் கைகொடுக்கும். ‘வேகத்தில்’ மிரட்ட மலிங்கா உள்ளார். ‘சுழலில்’ அஜந்தா மெண்டிஸ் அசத்தலாம்.


பாக்.,– நியூசி., மோதல்: 
           
இன்று மிர்புரில் நடக்கும் மற்றொரு பயிற்சி போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.


அயர்லாந்து–ஜிம்பாப்வே பலப்பரீட்சை:

இன்று நடக்கும் ‘பி’ பிரிவு ‘சூப்பர்–10’ தகுதிச் சுற்றுப் போட்டிகளில், அயர்லாந்து – ஜிம்பாப்வே, நெதர்லாந்து – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகள் மோதுகின்றன.

0 comments:

Post a Comment