தலைமுறையின் சிறந்த வீரர் - பைனலில் சச்சின்-காலிஸ்-வார்னே

தலைமுறையின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கான பைனல் பட்டியலில் சச்சின், காலிஸ், வார்னே இடம் பெற்றனர். சச்சின் விளையாடிய நாட்களில் கடுமையான போட்டி கொடுத்து வந்த வெஸ்ட் இண்டீசின் லாரா பின்தங்கினார்.      

கிரிக்கெட் இணையதளம் சார்பில் 1993 முதல் 2013 வரையிலான 20 ஆண்டுகளில் சிறந்து விளங்கிய வீரர் தேர்வு செய்யப்படவுள்ளார். 

‘தலைமுறையின் சிறந்த வீரர்’ என்ற பெயரிலான விருதுக்கு இந்தியாவின் சச்சின், வெஸ்ட் இண்டீசின் லாரா, தென் ஆப்ரிக்காவின் காலிஸ், இலங்கையின் முரளிதரன், ஆஸ்திரேலியாவின் வார்ன் உள்ளிட்டோர் இடம் பெற்றனர்.   
               
டிராவிட், லட்சுமண், வக்கார் யூனிஸ், இயான் சேப்பல் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், வர்ணனையாளர்கள், பத்திரிகையாளர்கள் என, 50 பிரபலங்கள் அடங்கிய நடுவர்கள் குழு சிறந்த வீரரை தேர்வு செய்கிறது.விருதுக்கான மூன்று பேர் கொண்ட பைனல் பட்டியலில் சச்சின், வார்ன், காலிஸ் தேர்வாகினர்.                   

சச்சினை பொறுத்தவரையில் 24 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில், ‘சதத்தில்’ சதம் அடித்து அசத்தியவர். தவிர, டெஸ்ட் (15,921 ரன்கள்), ஒருநாள் (18,426) அரங்கில் வியக்கத்தக்க சாதனைகள் படைத்துள்ளார்.     
              
வார்ன் தனது மாயாஜால சுழற்பந்து வீச்சினால், ரசிகர்களை மயக்கியவர். டெஸ்ட் வரலாற்றில் 700 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் வார்ன் (708 விக்.,).                   
இந்த தலைமுறையில் சிறந்த ‘ஆல் ரவுண்டர்’ காலிஸ் என்பதில் சந்தேகமில்லை. டெஸ்ட் (13,289), ஒருநாள் (11,574) போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களுக்கும் மேல் குவித்த இவர், 577 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.                   
டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட் சாய்த்த முரளிதரன், டெஸ்டில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் (400) எடுத்த லாரா பைனல் பட்டியலில் இடம் பெறவில்லை.         
          
கிரிக்கெட் இணையதளத்தின் 20 வது ஆண்டு விழாவை அடுத்து, இன்று மும்பையில் நடக்கும் விழாவில், சிறந்த வீரர் தேர்வு செய்யப்படவுள்ளார்.

0 comments:

Post a Comment