விராத் கோஹ்லி நான்காவது இடம்

ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், இந்தியாவின் விராத் கோஹ்லி 4வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் முதலிடத்துக்கு முன்னேறினார்.      

சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வௌியிட்டது. 

பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி (4வது இடம்), சுரேஷ் ரெய்னா (5வது இடம்), யுவராஜ் சிங் (6வது இடம்) ‘டாப்–10’ வரிசையில் இடம் பெற்றுள்ளனர்.     

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச், 3வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறினார். இதனையடுத்து நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் 2வது, இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் 3வது இடம் பிடித்தனர்.      

சுழல் ஆதிக்கம்: பவுலர்களுக்கான தரவரிசையில் ‘டாப்–20’ பட்டியலில் ஒரு இந்திய பவுலர் கூட இடம் பெறவில்லை. இந்தியா சார்பில் அஷ்வின் 22வது, ஹர்பஜன் சிங் 28வது இடத்தில் உள்ளனர். 

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் ‘சுழலில்’ அசத்திய வெஸ்ட் இண்டீசின் சாமுவேல் பத்ரி 13 இடங்கள் முன்னேறி, 2வது இடத்தை கைப்பற்றினார். முதலிடத்தில் மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் உள்ளார். 

மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் உள்ளார். பவுலர்களுக்கான ‘டாப்–10’ பட்டியலில், 9 சுழற்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். ஒன்பதாவது இடத்தில் உள்ள இலங்கையின் நுவன் குலசேகரா மட்டும் வேகப்பந்துவீச்சாளர்.
      
‘ஆல்–ரவுண்டர்’ யுவராஜ்: ‘ஆல்–ரவுண்டர்’களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் யுவராஜ் சிங் 3வது இடத்தில் உள்ளார். முதலிரண்டு இடங்களில் பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் உள்ளனர்.  

    
இந்தியா ‘நம்பர்–2’

அணிகளுக்கான ரேங்கிங்கில் (தரவரிசை), இந்திய அணி 123 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் இலங்கை அணி (129 புள்ளி) உள்ளது. மூன்றாவது இடத்தை பாகிஸ்தான் (121) அணி கைப்பற்றியது. 

அடுத்த எட்டு இடங்களில் தென் ஆப்ரிக்கா (120), ஆஸ்திரேலியா (112), வெஸ்ட் இண்டீஸ் (112), நியூசிலாந்து (108), இங்கிலாந்து (104), அயர்லாந்து (94), வங்கதேசம் (70), ஆப்கானிஸ்தான் (70) அணிகள் உள்ளன. வங்கதேசத்தில் இன்று துவங்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கு பின், இப்பட்டியலில் மாற்றம் வரலாம்.

0 comments:

Post a Comment