சேவக், காம்பிர் ஏமாற்றம்

வெஸ்ட் இண்டீஸ் "ஏ' அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்தியா "ஏ' அணியின் சீனியர் வீரர்களான சேவக், காம்பிர் சொற்ப ரன்னில் வெளியேறி ஏமாற்றினர்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் "ஏ' அணி, மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் (நான்கு நாள்) பங்கேற்கிறது. மைசூரில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் ஷிமோகா நகரில் நடக்கிறது.

முதல் நாள் ஆட்ட முடிவில், முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுக்கு 283 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. 

முதல் இன்னிங்சை தொடர்ந்த லியோன் ஜான்சன் (91) நம்பிக்கை அளித்தார். வீராசாமி பெருமாள் (0), பிடல் எட்வர்ட்ஸ் (2), கம்மின்ஸ் (0) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய நிகிதா மில்லர் (64*) அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 406 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் பார்கவ் பட் 7, ஜாகிர் கான், முகமது ஷமி, பர்வேஸ் ரசூல் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.


சீனியர்கள் ஏமாற்றம்:

பின் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு காம்பிர் (11) ஏமாற்றினார். கேப்டன் புஜாரா (25) நிலைக்கவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சேவக் (7) சொற்ப ரன்னில் அவுட்டானார். பின் இணைந்த ஜெகதீஷ், அபிஷேக் நாயர் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. அபாரமாக ஆடிய இவர்கள் அரைசதம் அடித்தனர்.

இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்திருந்தது. ஜெகதீஷ் (79), அபிஷேக் நாயர் (56) அவுட்டாகாமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் வீராசாமி பெருமாள் 2, நிகிதா மில்லர் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

0 comments:

Post a Comment