தெண்டுல்கரை போன்று 40 வயது வரை விளையாடுவேன் - கோலி

டெல்லியில் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் 24 வயதான விராட் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:-
சச்சின் தெண்டுல்கரை போன்று நானும் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடுவேன் என்று நம்புகிறேன். அவரது வயதை எட்டும் போது (இப்போது சச்சினின் வயது 40) நானும் தொடர்ந்து உடல்தகுதியுடன் இருப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. இத்தனை வயதிலும் அவர் உடல்தகுதியுடன் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. 

தெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தற்போதுவரை செய்துள்ள சாதனைகளில் 60 முதல் 70 சதவீதம் வரை என்னால் செய்ய முடிந்தால், மிகவும் மகிழ்ச்சி அடைவேன். 

சாதனை படைப்பதற்கு குறிப்பிட்ட வயது என்று எதுவும் கிடையாது. சச்சின் தெண்டுல்கரை பாருங்கள். 16 வயதில் ஆரம்பித்து 40 வயதிலும் இன்னும் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் தான் எப்போதும் எனக்கு ரோல் மாடல். அவரது கடின உழைப்பு இளைய தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கக்கூடியதாகும். 

இந்தியா வென்ற இரண்டு உலக கோப்பை(2007-ம் ஆண்டு 20 ஓவர், 2011-ம் ஆண்டு ஒரு நாள் போட்டி) அணிகளில் இடம்பிடித்திருந்தது நான் செய்த அதிர்ஷ்டம். குறிப்பாக தெண்டுல்கர் பங்கேற்ற 6-வது உலக கோப்பையில் நானும் அங்கம் வகித்தது பெருமைக்குரிய விஷயமாகும்.

நான் இதுவரை எதிர்கொண்ட பவுலர்களில் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டெயின், மோர்னே மோர்கல் ஆகியோர் மிகவும் அபாயகரமானவர்கள். இந்தியாவை தவிர்த்து எனக்கு பிடித்த வெளிநாட்டு கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல்(வெஸ்ட் இண்டீஸ்) தான். உண்மையிலேயே அதிரடி காட்டி, ரசிகர்களை குதூகலப்படுத்தக்கூடிய ஒரு வீரர் கெய்ல்.

அடுத்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் (வருகிற 10-ந்தேதி தொடக்கம்) கடினமானது என்பதில் சந்தேகமில்லை. காயம் காரணமாக அந்த அணியில் கேப்டன் மைக்கேல் கிளார்க் இல்லாவிட்டாலும் அவர்கள் பலம் வாய்ந்த அணி தான். 

களத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் வார்த்தைகளால் சீண்டினால் முதலில் பேட் மூலம் பதிலடி கொடுப்பேன். அதன் பிறகு என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம். ஆஸ்திரேலிய தொடரில் நிறைய ரன்கள் குவிப்பேன், அந்த தொடரையும் வெல்ல முடியும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு விராட் கோலி கூறினார்.

0 comments:

Post a Comment