ஆஸி.,யை ஜெயிக்க வைத்த இஷாந்த்

மொகாலி ஒருநாள் போட்டியில் சொதப்பலாக பந்துவீசிய இஷாந்த் சர்மா ஒரே ஓவரில் 30 ரன்களை வாரி வழங்க, ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் கேப்டன் தோனியின் சதம் வீணானது. 
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. நேற்று மூன்றாவது போட்டி, மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்தது. தொடர்ந்து மூன்றாவது முறையாக "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி, இம்முறை "பீல்டிங்' தேர்வு செய்தார். 

"நடந்தார்' தவான்: இந்திய அணியின் துவக்கம் படுமோசமாக இருந்தது. மக்காய் பந்தில் அம்பயர் தீர்ப்புக்கு காத்திருக்காமல் மனச்சாட்சிப்படி தானாக நடையை கட்டினார் ஷிகர் தவான் (8). 

கடந்த போட்டியில் அசத்திய ரோகித் சர்மா இம்முறை 11 ரன்களுக்கு வெளியேறினார். ரெய்னா(17), வழக்கம் போல ஜான்சனின் "ஷார்ட் பிட்ச்' பந்தில் பெவிலியன் திரும்பினார். இவரது அடுத்த பந்தில் யுவராஜ் சிங், "டக்' அவுட்டாக, இந்திய அணி 76 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

பின் கோஹ்லி, கேப்டன் தோனி சேர்ந்து போராடினர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி, ஒருநாள் அரங்கில் தனது 26வது அரைசதத்தை எட்டினார். இவர், 68 ரன்கள் எடுத்த போது, மேக்ஸ்வெல் "சுழலில்' சிக்கினார்.

தோனி அதிரடி: ரவிந்திர ஜடேஜா (2) வந்த வேகத்தில் கிளம்பினார். பின் வந்த அஷ்வின், தோனிக்கு "கம்பெனி' கொடுக்க, இந்திய அணி 39.5 வது ஓவரில் 200 ரன்களை கடந்தது. மெல்ல மெல்ல அதிரடிக்கு திரும்பிய தோனி, தோகர்டி ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி விளாசினார். 

மறுமுனையில் அஷ்வின் 28 ரன்னுக்கு அவுட்டான போதும், வாட்சன் ஓவரிலும் தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார் தோனி. பின், பால்க்னர் பந்துகளில் பவுண்டரி விளாசிய இவர், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 9வது சதம் அடித்தார். புவனேஷ்வர் குமார் (10) ஓரளவு கைகொடுத்தார்.

தோனி 105 ரன்கள் எடுத்த போது கொடுத்த "கேட்ச்' வாய்ப்பை, பெய்லி கோட்டை விட்டார். இதனை பயன்படுத்திய இவர், இதே ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். பால்க்னரின் கடைசி ஓவரில் தோனி 2 பவுண்டரி, சிக்சர் அடித்து மிரட்ட, கடைசி 10 ஓவரில் இந்திய அணி 101 ரன்கள் குவித்தது. வினய் குமார் (0), ரன் அவுட்டானார். 

இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 303 ரன்கள் எடுத்தது. தோனி 139 (121 பந்து) அவுட்டாகாமல் இருந்தார்.

வினய் திருப்பம்: கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு பின்ச், ஹியுஸ் ஜோடி மீண்டும் நல்ல துவக்கம் கொடுத்தது. வினய் "வேகத்தில்' ஹியுஸ் (22) அவுட்டானார். பின்ச் (38), இஷாந்த் சர்மாவிடம் சிக்கினார். வாட்சன் (11), பெய்லி (43) அதிக நேரம் நிலைக்கவில்லை. "அபாய' மேக்ஸ்வெல் (3), ஷிகர் தவானின் நேரடி "த்ரோவில்' ரன் அவுட்டானார். ஹாடின் (24) தாக்குப்பிடிக்கவில்லை. 

வோஜஸ் தனது 4வது அரைசதம் கடந்தார். இவர், பால்க்னருடன் இணைந்து கடைசி நேரத்தில் ரன்குவிப்பில் ஈடுபட்டார். இஷாந்த் வீசிய போட்டியின் 48வது ஓவர் திருப்புமுனை ஏற்படுத்தியது. இந்த ஓவரில் பால்க்னர் 4 சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 30 ரன்கள் எடுக்க, இந்திய ரசிகர்களின் இதயம் நொறுங்கியது. 

ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு, கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. வினய் குமார் வீசிய இந்த ஓவரின் முதல் 2 பந்தில் 3 ரன்கள் எடுக்கப்பட்டன. அடுத்த பந்தில் பால்க்னர் சிக்சர் அடிக்க, ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

29 பந்தில் 64 ரன்கள் எடுத்த பால்க்னர், வோஜஸ் (76) அவுட்டாகாமல் இருந்தனர். இதையடுத்து, ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என, முன்னிலை பெற்றது. ஆட்டநாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் பால்க்னர் வென்றார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி வரும் அக்., 23ம் தேதி ராஞ்சியில் நடக்கிறது.


"வில்லன்' 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டியில், 16 ஓவர்கள் பவுலிங் செய்து, 126 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார் இஷாந்த். இவரை மொகாலி போட்டியில் சேர்க்க, கடும் எதிர்ப்பு இருந்தது. இருப்பினும், நம்பிக்கை வைத்து களமிறக்கினார் தோனி. ஆனால், நேற்று 8 ஓவரில் 63 ரன்கள் கொடுத்து, இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தார். 

0 comments:

Post a Comment