கோஹ்லி அதிரடி சதம் - இந்திய அணி வெற்றிஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆறாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கோஹ்லி அதிரடியாக சதம் விளாச, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில், இந்திய அணி 1-2 என பின்தங்கியது. 

நான்காவது, ஐந்தாவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட, சிக்கல் ஏற்பட்டது. ஆறாவது போட்டி இன்று நாக்பூரில் நடந்தது. இதில் "டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி முதலில் "பீல்டிங்' தேர்வு செய்தார். 

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களான வினய் குமார், உனத்கத் நீக்கப்பட்டு, அமித் மிஸ்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் வாய்ப்பு பெற்றனர். ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.


வாட்சன், பெய்லி அதிரடி: 

ஆஸ்திரேலியா அணிக்கு ஹியுஸ், பின்ச் ஜோடி துவக்கம் கொடுத்தது. ஷமி பந்துவீச்சில் இரண்டு பவுண்டரிகள் விளாசிய ஹியுஸ் 13 ரன்களில் வெளியேறினார். அஷ்வின் சுழலில் பின்ச் (20) சிக்கினார். 

பின் இணைந்த வாட்சன், கேப்டன் பெய்லி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அஷ்வின் ஓவரில் பெய்லி ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். தன் பங்கிற்கு ஜடேஜா பந்துவீச்சில் வாட்சன் ஒரு சிக்சர், பவுண்டரி விளாசினார். 

ஷமி ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்த வாட்சன் ஒரு நாள் அரங்கில் 9வது சதத்தை பதிவு செய்தார். இவர் 102 ரன்களில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார். புவனேஷ்வர் பந்துவீச்சில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்த பெய்லி ஒரு நாள் அரங்கில் தனது 2வது சதத்தை எட்டினார். 


ஜடேஜா அசத்தல்: 

இவருக்கு வோஜஸ் நல்ல ஒத்துழைப்பு தந்தார். ஷமி ஓவரில் பெய்லி ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். பின் வந்த ஜடேஜா சுழல் ஜாலம் காட்டினார். இவரது வலையில் பெய்லி (156), மிட்சல் ஜான்சன் (0) சிக்கினர். ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 350 ரன்கள் எடுத்திருந்தது. வோஜஸ் (44), ஹாடின் (0) அவுட்டாகாமல் இருந்தனர். 


தவான் சதம்: 

இந்திய அணிக்கு தவான், ரோகித் ஜோடி துவக்கம் தந்தது. ஜான்சன் பந்தை ரோகித் பவுண்டரிக்கு விரட்டினார். தவான் ஒன்றிரண்டு ரன்களாக சேர்த்தார். மெக்கே ஓவரில் ரோகித் மூன்று பவுண்டரிகள் விளாசினார். மேக்ஸ்வெல், ஜான்சன் ஓவரில் தலா ஒரு பவுண்டரி அடித்த ரோகித் 19வது அரை சதத்தை பதிவு செய்தார். இவர் 79 ரன்களில் அவுட்டானார். 


கோஹ்லி அபாரம்: 

பின் வந்த கோஹ்லி அதிரடி காட்டினார். தோகர்டி ஓவரில் இவர் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். மறுபுறம், மெக்கே பந்தை பவுண்டரிக்கு விரட்டிய தவான், ஒரு நாள் அரங்கில் தனது 4வது சதத்தை எட்டினார். 

இவர் 100 ரன்களில் அவுட்டானார். பின் வந்த ரெய்னா (16), யுவராஜ் (0) ஜான்சன் வேகத்தில் பெவிலியன் திரும்பினர். பால்க்னர் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசிய கோஹ்லி ஒரு நாள் அரங்கில் 17வது சதம் அடித்தார். கடைசி ஓவரின் 3வது பந்தில் தோனி 2 ரன்கள் எடுக்க, வெற்றி எளிதானது. 

முடிவில், இந்திய அணி 49.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 351 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி (115), தோனி (25) அவுட்டாகாமல் இருந்தனர். 

0 comments:

Post a Comment