சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி தேர்வு எப்போது?


சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி மே 4ம் தேதி மும்பையில் அறிவிக்கப்பட உள்ளது.

இங்கிலாந்தில், வரும் ஜூன் 6-23ம் தேதிகளில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 

லீக் சுற்றின் முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் தலா முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், வரும் ஜூன் 19, 20ம் தேதிகளில் நடக்கவுள்ள அரையிறுதியில் விளையாடும். பைனல், ஜூன் 23ம் தேதி பர்மிங்காமில் நடக்கவுள்ளது.

"ஏ' பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து அணிகளும், "பி' பிரிவில் இந்தியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன. வரும் ஜூன் 6ம் தேதி கார்டிப் நகரில் நடக்கவுள்ள தொடரின் முதல் போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. அதன்பின் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் (ஜூன் 11), பாகிஸ்தான் (ஜூன் 15) அணிகளுடன் விளையாடுகிறது.

இத்தொடருக்கான 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி, கடந்த ஏப்., 6ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சேவக், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு "கல்தா' கொடுக்கப்பட்டது. இந்த உத்தேச அணியில் இருந்து, சிறந்த 15 பேர் கொண்ட இறுதி அணி, பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் தலைமையில் வரும் மே 4ம் தேதி மும்பையில் தேர்வு செய்யப்பட உள்ளது.


இந்திய உத்தேச அணி விவரம்: முரளி விஜய், ஷிகர் தவான், காம்பிர், உன்முக்த் சந்த், கோஹ்லி, யுவராஜ் சிங், ரெய்னா, ரோகித் சர்மா, மனோஜ் திவாரி, ரகானே, அம்பதி ராயுடு, ஜாதவ், தோனி, விரிதிமான் சகா, தினேஷ் கார்த்திக், அஷ்வின், அமித் மிஸ்ரா, ஜடேஜா, சேனா, பர்வேஸ் ரசூல், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், டிண்டா, உமேஷ் யாதவ், ஷமி அகமது, இர்பான் பதான், வினய் குமார், பிரவீண் குமார், ஈஷ்வர் பாண்டே, சித்தார்த் கவுல்.

0 comments:

Post a Comment