சுழற்சி முறையில் வாய்ப்பு - சேவக்

காயத்தில் இருந்து தப்பிக்க, போட்டியில் வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்,'' என, இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக் தெரிவித்துள்ளார்.

இந்தியா வரவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நவ.,6ம் தேதி டில்லியில் துவங்குகிறது. இப்போட்டிக்கான இந்திய அணியில், தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்ட அதிரடி துவக்க வீரர் சேவக் இடம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து சேவக் கூறியதாவது: காயம், உடற்தகுதி உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து தப்பிக்க, வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இம்முறையை பயன்படுத்த வேண்டும்.

ஏனெனில் பேட்ஸ்மேன்களை காட்டிலும், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு விரைவில் காயமடையும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
காயம் காரணமாக இங்கிலாந்து மண்ணில் நடந்த தொடரில் விளையாட முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. ஏனெனில் அப்போது நிறைய முன்னணி வீரர்கள் காயம் காரணமாக பங்கேற்காததால், மோசமான தோல்வியை சந்திக்க வேண்டியதாயிற்று.

எந்த ஒரு வீரரும், காயத்தில் இருந்து மீள்வது எளிதான காரியமல்ல. காயத்தின் தன்மையை பொறுத்து மாறுபடும். தற்போது எனது கவனம் முழுவதும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மீது உள்ளது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி திறமையை நிரூபிக்க வேண்டும்.
இந்திய வீரர்கள், டெஸ்ட் போட்டியை காட்டிலும் ஐ.பி.எல்., போன்ற அதிகளவு பணம் புரலும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்ற செய்தி வெளியானது. இது முற்றிலும் தவறு. எந்த ஒரு வீரரும் முதலில் டெஸ்ட் போட்டியில் தான் விளையாட வேண்டும் என நினைப்பார்கள்.

ஏனெனில் டெஸ்ட் போட்டியின் மூலம் ஒரு வீரரின் உண்மையான திறமையை கண்டறிய முடியும். எந்த ஒரு வீரரும், சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டு, ஐ.பி.எல்., போன்ற போட்டிகளில் விளையாட விரும்பமாட்டார்கள்.
சமீபத்தில் நடந்த உலக கோப்பை தொடரின் போது நான் காயத்துடன் விளையாடினேன். இதேபோல "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினும், தொடைப்பகுதியில் காயத்துடன் விளையாடினார். காயம் குறித்து அதிகளவு சிந்திக்காமல், நாட்டுக்காக விளையாட நினைத்ததால், கோப்பை வென்று சாதிக்க முடிந்தது.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில், சச்சின் இடத்தை பூர்த்தி செய்வது கடினம். இதற்கு நீண்ட காலம் கடுமையாக போராட வேண்டும். தற்போதுள்ள இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒருவேளை சீனியர் வீரர்கள் ஓய்வு பெறும் பட்சத்தில், அவர்களது இடத்தை இளம் வீரர்கள் எளிதில் பூர்த்தி செய்வார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு சேவக் கூறினார்.

0 comments:

Post a Comment