குழப்பமான புதிய விதிமுறை: கோஹ்லி

ஐ.சி.சி., அறிமுகப்படுத்தி உள்ள ஒருநாள் போட்டிக்கான புதிய விதிமுறை குழப்பமாக உள்ளது,'' என, இந்திய வீரர் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), சமீபத்தில் ஒருநாள் போட்டிக்கான விதிமுறையை தற்போது நடக்கும் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு ஒருநாள் தொடரில் அறிமுகம் செய்தது. இதன்படி, ஒரு இன்னிங்சில் இரண்டு பந்துகள், "பவுர்பிளே' நிபந்தனை, "ரன்னர்' கிடையாது, உள்ளிட்ட பல புதிய முறைகள் பின்பற்றப்பட்டன.

இதுகுறித்து இந்திய "மிடில்-ஆர்டர்' பேட்ஸ்மேன் விராத் கோஹ்லி கூறியதாவது: ஒருநாள் போட்டிக்கான விதிமுறையில் மாற்றம் செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் புதிய விதிமுறைகள் சற்று குழப்பமாக உள்ளது.

"ரன்-அவுட்' குழப்பம்:

குறிப்பாக "ரன்-அவுட்' தொடர்பான புதிய விதிமுறை சந்தேகமாக இருக்கிறது. இதன்படி பீல்டரை தடுக்கும் விதமாக செயல்படும் பேட்ஸ்மேனுக்கு "ரன் அவுட்' கொடுக்கலாம். அதாவது, ஒரு பீல்டர் "ரன் அவுட்' செய்ய முற்படும் போது, பேட்ஸ்மேன் தனது விக்கெட்டை காப்பாற்றிக் கொள்வதற்காக வேண்டுமென்றே திசையை மாற்றி ஓடினால், அவருக்கு "அவுட்' கொடுக்கலாம்.

இது தொடர்பான முடிவை எடுக்க, களத்தில் இருக்கும் அம்பயர் மூன்றாவது அம்பயரை கேட்கலாம். இதில் "ரன் அவுட்' செய்யப்பட்ட பின் தான் "அப்பீல்' செய்ய வேண்டுமா என்பது போன்ற விஷயங்கள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.


மழையால் பாதிப்பு:

இங்கிலாந்து மண்ணில் கண்ட தொடர் தோல்விகளுக்கு பின், தற்போது முதல்முறையாக வெற்றி கிடைத்திருப்பது உற்சாகமாக உள்ளது. இந்த வெற்றி அடுத்து வரும் போட்டிகளிலும் சாதிக்க உதவும் என நம்புகிறேன். சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் நடந்த ஒருநாள் போட்டியில் எங்களது செயல்பாடு சிறப்பாக இருந்தது. ஆனால் மழை உள்ளிட்ட காரணங்களால், வெற்றி நழுவியது.


சுழற்பந்துவீச்சு பலம்:

இந்திய அணியின் பலம் சுழற்பந்துவீச்சு தான். முதல் போட்டியில் "மிடில் ஓவரில்' சுழற்பந்துவீச்சாளர்கள் அருமையாக செயல்பட்டனர். இதனால் இங்கிலாந்து அணியின் ரன் வேட்டை தடுக்கப்பட்டு விக்கெட் வேட்டை நடத்தப்பட்டது.

வேகப்பந்துவீச்சில் பிரவீண் குமார் நம்பிக்கை அளித்தார். இளம் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் அருமையாக செயல்பட்டார். முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில் இளம் வீரர்களின் செயல்பாடு திருப்தி அளிக்கிறது.

0 comments:

Post a Comment