ஏமாற்றம் அளித்த பீல்டிங்

மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் இங்கிலாந்து அணியின் "பீல்டிங்' மோசமாக இருந்தது,'' என, இங்கிலாந்து கேப்டன் குக் தெரிவித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மோதுகின்றன. முதல் மூன்று போட்டிகளில் வென்ற இந்திய அணி, தொடரை வென்றது.

இது குறித்து குக் கூறியது:

முதல் இரண்டு போட்டிகளை காட்டிலும், மூன்றாவது போட்டியில் எங்களது பேட்டிங், பவுலிங்கில் முன்னேற்றம் காணப்பட்டது. "உலக சாம்பியன்' இந்திய அணிக்கு எதிராக 298 ரன்கள் எடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. நல்ல இலக்கினை தான் நிர்ணயித்தோம்.

ஆனால் "பீல்டிங்கில்' தவறு செய்ததால் வெற்றி வாய்ப்பினை இழக்க நேரிட்டது. இதன் காரணமாக இந்திய அணி, கூடுதலாக 20 முதல் 25 ரன்கள் எடுத்தது. விராத் கோஹ்லி கொடுத்த இரண்டு "கேட்ச்' வாய்ப்பு, ரவிந்திர ஜடேஜாவினை "ரன்அவுட்' செய்யும் வாய்ப்பு ஆகியவற்றை "விக்கெட் கீப்பர்' கீஸ்வெட்டர் தவற விட்டார்.

இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகி இருந்தோம். ஆனால் "பீல்டிங்கில்' சாதிக்க தவறியது ஏமாற்றம் அளித்தது. 0-3 என பின்தங்கியுள்ள நிலையில், மீதமுள்ள போட்டிகளை சவாலாக எடுத்துக் கொண்டு வெற்றி பெறுவோம்.

டிராட் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 98 ரன்கள் குவித்தார். இதன் மூலம் அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. இவரை போன்ற பேட்ஸ்மேன் தான் அணிக்கு தேவை. பிராட், ஆண்டர்சன் அணியில் இடம் பெறாதது, பெரிய பின்னடைவாக அமைந்தது.

கடந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணியினர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் தோனி போட்டியை வெற்றிகரமாக முடிக்கிறார்.

0 comments:

Post a Comment