முத்தரப்பு ஹாக்கி லீக் போட்டியில் இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் மோதிக் கொண்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த இந்திய வீரர் குர்பாஜ் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு ஹாக்கி தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. பசல்டன் நகரில் நேற்று நடந்த இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்திய அணிக்கு துஷார் கண்டேகர், முஜ்தபா, ருபிந்தர் சிங் தலா ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் 3-0 என முன்னிலை பெற்றது.
பின் பாகிஸ்தான் அணிக்கு சோகைல் அபாஸ் (48, 64வது நிமிடம்) இரண்டு கோல் அடித்தார். இதனை தொடர்ந்து கேப்டன் ஷகீல் ஒரு கோல் அடிக்க, போட்டி 3---3 என "டிரா' ஆனது.
பயங்கர மோதல்:
இப்போட்டியின் கடைசி கட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க, ஆக்ரோஷமாக போராடினர். அப்போது "பெனால்டி கார்னர்' ஏரியாவில் வைத்து இந்தியாவின் குர்பஜ் சிங் மற்றும் பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் முரட்டுத் தனமாக தடுத்ததாக, பாகிஸ்தான் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து இரு அணி வீரர்களும் கடுமையாக மோதிக் கொண்டனர். ஒருகட்டத்தில் கைகலப்பில் ஈடுபட, போட்டி முடிய ஒரு நிமிடம் 35 வினாடிகள் மீதம் இருக்கும் போது ஆட்டம் நிறுத்தப்பட்டது.
அரைமணி நேரம் வரை போட்டி நடக்கவில்லை. பின் இரு அணி வீரர்களும் மைதானத்துக்கு திரும்பினர். ஆனலும், போட்டியை தொடர வேண்டாம் என முடிவு செய்தனர்.
இந்த மோதலில் காயம் அடைந்த இந்திய வீரர் குர்பஜ் சிங், ஆஸ்பத்திரியில் அனுமதிப்பட்டுள்ளார். பாகிஸ்தான் வீரர்கள் இம்ரான் சகா, ரசூல் ஆகியோரும் காயம் அடைந்திருப்பதாக தெரிகிறது.
0 comments:
Post a Comment