இந்தியாவுக்கு நியூசிலாந்து மண்ணில் புது நெருக்கடி

நியூசிலாந்தில் வீசும் பலத்த காற்று இந்திய வீரர்களுக்கு பெரும் தொல்லையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வீரர்கள் உள்ளூரில் புலி தான். அன்னிய மண் என்று வந்து விட்டால், அவ்வளவு தான். எவ்வளவு அடி கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு திரும்புவர். 

கடந்த 2011ல் இங்கிலாந்து (0-4), 2011-12ல் ஆஸ்திரேலியா (0-4), 2013ல் தென் ஆப்ரிக்கா (0-1) என, பங்கேற்ற பங்கேற்ற 10 டெஸ்டில், 9ல் தோல்வியடைந்தது. ஒரு டெஸ்ட் போட்டியை (2013, ஜோகனஸ்பர்க்) மட்டும் "டிரா' செய்தது.

வரும் 12ம் தேதி இந்திய அணி, நியூசிலாந்து கிளம்புகிறது. இங்கு ஐந்து ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.


வரலாறு எப்படி:

கடந்த 1967–-68ல் முதன் முறையாக நியூசிலாந்து சென்ற போது, இந்திய அணி டெஸ்ட் தொடரை 3-–1 என, வென்றது. இதன் பின் 7 தொடர்களில், இந்திய அணி 2 டெஸ்டில் மட்டும் தான் வெற்றி பெற்றது.

கடைசியாக 2009ல் தோனி தலைமையில் சென்ற இந்திய அணி, 41 ஆண்டுகளுக்குப்பின் டெஸ்ட் தொடரை (1–-0) வென்று திரும்பியது. இருப்பினும், நியூசிலாந்தில் மொத்தம் பங்கேற்ற 21 டெஸ்டில், இந்திய அணி 5ல் தான் வெற்றி பெற்றது.


வெற்றி தொடர்:

தவிர, ஒருநாள் தொடர்களை பொறுத்தவரையில், கடந்த 1975-–76 முதல் பங்கேற்ற 5 தொடர்களில் ஒன்றைக் கூட கைப்பற்றியதில்லை. முதன் முறையாக 2009ல் தோனியின் அணி தான் கோப்பை வென்று திரும்பியது. இதற்கு, அப்போதைய ஆடுகளங்கள் துணைக்கண்டத்தைப் போல, பேட்டிங்கிற்கு சாதகமாக அமைக்கப்பட்டு இருந்தன.


கடும் சவால்:

இம்முறை இந்திய அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது. ஏனெனில், நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைக்குமாறு, வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏற்கனவே, சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் இருந்து தோல்வியுடன் திரும்பிய, தோனியின் படைக்கு, இது மற்றொரு சோதனை தான். சச்சின், டிராவிட், லட்சுமண் இல்லாத நிலையில், புஜாரா, விராத் கோஹ்லி, ரகானே போன்ற இளம் வீரர்கள் ஆறுதல் தந்த போதும், இவை வெற்றிக்கு போதவில்லை.


காற்று தொல்லை:

தவிர, நியூசிலாந்தில் காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும். பந்துகள் பவுன்ஸ் ஆகும் அதேநேரத்தில், காற்றும் கைகொடுப்பதால் நன்கு "சுவிங்' ஆகும். இதை சமாளிப்பது கடினம் தான்.

தவிர, நியூசிலாந்து உலகத்தரம் வாய்ந்த அணி அல்ல என்ற போதிலும், சொந்தமண்ணில் அசைக்க முடியாத வீரர்களாக வலம் வருகின்றனர். இந்த சாதகத்தை பயன்படுத்தி போட்டிகளில் வெற்றி பெறுவதில் வல்லவர்கள்.
இதனால், இந்திய அணி இம்முறை வெற்றிபெற, கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். 
 

அனுபவம் உள்ளது

சமீபத்தில் இந்தியா "ஏ', 19 வயது அணிகளுடன் நியூசிலாந்து சென்று திரும்பிய பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புட் கூறுகையில்,"" தென் ஆப்ரிக்க ஆடுகளங்கள் கடினமானது. பந்து நன்கு "பவுன்ஸ்' ஆகும். நியூசிலாந்தில் காற்றின் வேகம் அதிகம். 

இதில் "சுவிங்' ஆகி வரும் பந்துகளை சந்திப்பது கடினம். முதலில் இருந்தே அடித்து விளையாட முடியாது. கோஹ்லி, ரகானே, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமிக்கு இங்கு விளையாடிய அனுபவம் உள்ளது,'' என்றார்.

0 comments:

Post a Comment