நம்பர் 1 மகுடத்தை இழந்தது இந்தியா



நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால், தரவரிசையில் ‘நம்பர்–1’ இடத்தை இழந்தது. 

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, முதலில் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, 0–-1 என பின்தங்கியிருந்தது. 

இரு அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணிக்கு ஜெசி ரைடர் (20), கப்டில் (44) ஜோடி அசத்தல் துவக்கம் அளித்தது. போட்டியின் 17 ஓவர் முடிவில், லேசான மழை குறுக்கிட்ட காரணத்தினால் 5 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. 

வில்லியம்சன் (77), ஒருநாள் அரங்கில் தனது 8வது அரைசதத்தை பதிவு செய்தார். நியூசிலாந்து அணி 33.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதையடுத்து போட்டி 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 

ராஸ் டெய்லர் (57) அரைசதம் கடந்து வெளியேறினார். கடைசி நேரத்தில், அதிரடியாக ரன்கள் சேர்த்த கோரி ஆண்டர்சன் 17 பந்தில் 44 ரன்கள் விளாச, நியூசிலாந்து அணி 42 ஒவரில், 7 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இந்திய அணிக்கு ‘டக்வொர்த்-–லீவிஸ்’ முறைப்படி 297 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. 

இந்தியா சார்பில் முகமது ஷமி 3 விக்கெட் கைப்பற்றினார்.

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா (20), ஷிகர் தவான் (12) ஜோடி சொதப்பல் துவக்கம் அளித்தது. ரகானே (35) தாக்குபிடிக்கவில்லை. கோஹ்லி (78) அரைசதம் கடந்தார். 

ரெய்னா (35), கேப்டன் தோனி (56) போராடியும் வெற்றி கிடைக்கவில்லை. இந்திய அணி, 41.3 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. 

இதையடுத்து ‘டக்வொர்த்–லீவிஸ்’ முறைப்படி இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 

0 comments:

Post a Comment