கபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது



இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், ஆண்டுதோறும், சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும். இவ்விருதுக்கு இம்முறை கபில் தேவ் தேர்வு செய்யப்பட்டார். நேற்று மும்பையில் நடந்த விழாவில் இவருக்கு, விருதுடன் ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. 

கடந்த 1983ல் இந்தியாவுக்கு முதன்முறையாக உலக கோப்பை (50 ஓவர்) வென்று தந்த கபில், 131 டெஸ்ட் (5248 ரன்கள், 434 விக்கெட்), 225 ஒருநாள் (3783 ரன்கள், 253 விக்கெட்) போட்டிகளில் விளையாடி உள்ளார். 

கடந்த சீசனில்(2012-–13) சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்ட வீரருக்கான பாலி உம்ரிகர் விருதை ‘சுழல்’ நாயகன் அஷ்வின் பெற்றார். இவர் இந்த காலக்கட்டத்தில் 8 டெஸ்டில் 43 விக்கெட் வீழ்த்தினார். 18 ஒருநாள் போட்டிகளில் 24 விக்கெட் கைப்பற்றினார். இவருக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

ரஞ்சி டிராபியில்(2012-–13) சிறந்த ‘ஆல்-ரவுண்டருக்கான’ விருதை அபிஷேக் நாயர் பெற்றார்.  இவர் 11 போட்டிகளில் 966 ரன்கள் எடுத்துள்ளார். இவர் ரூ.2.5 லட்சம் பரிசை தட்டிச் சென்றார்.

சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரோகித் சர்மா, இந்தியாவின் சிறந்த வீரருக்கான(2013-–14) திலிப் சர்தேசாய் விருது பெற்றார். இவர் 2 டெஸ்டில் 288 ரன்கள் எடுத்தார். இவர் ரூ. 5 லட்சம் பரிசு பெற்றார்.

சிறந்த வீராங்கனைக்கான(சீனியர்) விருதை தமிழகத்தின் திருஷ்காமனி(ரூ. 50 ஆயிரம் பரிசு) பெற்றார்.

இந்திய கிரிக்கெட் சேவைக்காக ஜாம்பவான்கள் பாபு நட்கர்னி, பரூக் இன்ஜினியர், மறைந்த ஏக்நாத் சோல்கர் ஆகிய மூவருக்கும் தலா ரூ. 15 லட்சம் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டது. நட்கர்னி, பரூக் பங்கேற்கவில்லை. சோல்கர் சார்பில் அவரது மனைவி விருதை பெற்றார்.

இந்நிகழ்ச்சியில் சச்சின், லட்சுமண், கங்குலி, தோனி உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பங்கேற்றனர்.

பின் கபில் தேவ் கூறுகையில்,“நாங்கள் விளையாடிய காலத்தில், விருது பற்றி எல்லாம் நினைக்கவில்லை. கிரிக்கெட் மீதான மோகத்தால் விளையாடினோம். நாட்டில் கிரிக்கெட் இந்த அளவுக்கு பிரபலம் அடைந்ததை எண்ணி பெருமைப்படுகிறேன்,”என்றார்.

0 comments:

Post a Comment