தோனியுடன் காம்பிர் மோதலா?எனக்கும், கேப்டன் தோனிக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் தான் அணியில் சேர்க்கப்படாததற்கு காரணம் என்ற செய்தியில் உண்மையில்லை,’’ என, காம்பிர் தெரிவித்தார்.      

இந்திய அணியின் துவக்க வீரர் காம்பிர், 32. இதுவரை 54 டெஸ்ட் (4,021 ரன்கள்), 147 ஒருநாள் (5,238) மற்றும் 37 ‘டுவென்டி-20’ (937) பங்கேற்றுள்ளார். கடைசியாக 2012, டிச.,ல் இங்கிலாந்துக்கு எதிரான் நாக்பூர் டெஸ்ட் போட்டிக்குப் பின் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.     
  
இவர், ‘அணியில் தனது இடத்தை தக்க வைக்க மட்டும் விளையாடுகிறார். வெற்றிக்கு முயற்சிப்பதில்லை,’ என, கேப்டன் தோனி புகார் கூறியதாக அப்போது செய்திகள் வெளியாகின.       

தற்போது, இழந்த ‘பார்மை’ மீட்க காம்பிர் போராடி வருகிறார். கடந்த 2009, நியூசிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்ட இவர், இரண்டு சதம் அடித்தார். ஆனாலும், எதிர்வரும் நியூசிலாந்து தொடரில் இவரது பெயரை தேர்வாளர்கள் பரிசீலிக்கக் கூட இல்லை.       

இதுகுறித்து காம்பிர் கூறியது: எனக்கும், கேப்டன் தோனிக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் தான் அணியில் சேர்க்கப்படாததற்கு காரணம் என்ற செய்தியில் உண்மையில்லை. 

இது ஒரு சிலரால் உருவாக்கப்பட்ட கற்பனைக் கதை. இதைத்தான் நான் முதலில் கூறினேன். இப்போதும் இதையே தான் சொல்கிறேன். என் விஷயத்தில் மட்டுமல்ல சேவக், யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் என, யாருக்கும் தோனியுடன் உரசல் கிடையாது. 

மோசமான ‘பார்ம்’ மற்றும் உடற்தகுதியால்  நாங்கள் அணியில் இல்லாத நேரத்தில், இப்படி பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன, அவ்வளவு தான். மற்றபடி எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை.       

நியூசிலாந்து தொடரில் இடம் பெறாததால், எனக்கு பெரிய பாதிப்பு இல்லை. இதை எல்லோரும் நம்புங்கள். வீரர்கள் அணியில் இருந்து வெளியேற்றப்படுவதும், மீண்டும் திரும்புவதும், கிரிக்கெட்டில் சகஜம். சச்சின் தவிர, இந்திய அணியிலுள்ள வீரர்கள் எல்லோரும் இப்படிப்பட்ட சூழ்நிலையை சந்தித்தவர்கள் தான்.       

கடந்த 2011 வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து தோள்பட்டை காயம் காரணமாக விலகிவிட்டு, பின் பிரிமியர் தொடரில் பங்கேற்ற போது, தேசத்தை விட கிளப் அணிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறினர்.   
    
இதெல்லாம் கட்டுக்கதை. காயமடைந்த நேரத்தில் இந்திய அணிக்காக பல போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். என்னைப் பொறுத்தவரை பிரிமியர் தொடரில் பங்கேற்பதை விட, இந்திய அணிக்காக விளையாடுவதற்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பேன்.       

இவ்வாறு காம்பிர் கூறினார்.      

0 comments:

Post a Comment