யுவராஜுக்கு என்ன பிரச்னை?

யுவராஜ் சிங் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இருமலும் வாந்தியும் தொடர்ந்து இருந்தது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நுரையீரல் "கேன்சர்' என்று டாக்டர்கள் தெரிவித்த போது, அதிர்ந்து போனோம்.

ஆனாலும், வாழ்க்கை மீதான நம்பிக்கையை இழக்காத யுவராஜ், மிக விரைவில் மீண்டான்,''என, தாயார் ஷப்னம் சிங் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ். சமீபத்தில் நடந்த உலக கோப்பை தொடரில், நமது அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இத்தொடரின் போதே இவரது நுரையீரலில் பிரச்னை இருப்பதாக செய்திகள் வெளியாகின.

தற்போது ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. இந்நிலையில் யுவராஜ் சிங்கிற்கு "கேன்சர்' நோய்க்கான அறிகுறிகள் இருந்ததாக அவரது தாயார் ஷப்னம் சிங் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.


இது குறித்து ஷப்னம் கூறியது:

இந்தியாவில் நடந்த உலக கோப்பை தொடரின் போதே யுவராஜுக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டது. கடுமையான இருமல் மற்றும் வாந்தி இருந்தது. உள்ளூரில் சாதிக்க வேண்டும் என்ற நெருக்கடி காரணமாக இத்தகைய பிரச்னைகள் இருக்கலாம் என்று நினைத்தோம்.

இந்திய அணி கோப்பை வென்ற பின், முறைப்படி மருத்துவ பரிசோதனை செய்தோம். அப்போது இடது நுரையீரலில் "கோல்ப்' பந்து அளவுக்கு சிறிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இது "கேன்சர்' நோயாக இருக்கலாம் என்று டாக்டர்கள் முதலில் கூறிய போது அதிர்ந்து போனோம். ஏனென்றால் இதற்கு முன்பும் யுவராஜுக்கு இருமல் வந்துள்ளது. அப்போது தூசியால் ஏற்பட்ட "அலர்ஜி' என்று தான் சொன்னார்கள்.


துணிச்சலானவர்:

ஆரம்பத்தில் யுவராஜ் கடும் வலியால் அவதிப்பட்டான். அவனை பார்ப்பதற்கே வேதனையாக இருந்தது. அவனது அறையில் முடங்கினான். தனது நோய் பற்றி யாருக்கும் தெரியக் கூடாது என நினைத்தான். ஆனாலும் வாழ்க்கை மீதான நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. மருத்துவ அறிக்கையை படித்த பின்,""இந்த அறிக்கையை நம்பவில்லை.

நான் நன்றாக இருப்பதாக, எனது உள்ளூணர்வு சொல்கிறது,''என்றான். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டான். ஒரு "ஸ்கேன்' மாறி இன்னொரு "ஸ்கேன்' செய்தான்.

அவனது முகத்தில் புன்னகையை காண முடிந்தாலும், கண்களில் மரண பயம் இருந்தது. எனக்கு அவ்வப்போது நம்பிக்கை அளித்தான். ""நான் துணிச்சலான பையன். இந்த பிரச்னையில் இருந்து கண்டிப்பாக மீள்வேன்,''என்று உறுதியாக சொன்னான்.


நம்பிக்கை வெற்றி:

இறுதியில், கடந்த அக்டோபரில் அவனது தன்னம்பிக்கைக்கு வெற்றி கிடைத்தது. மூன்றாவது முறையாக செய்யப்பட்ட "பயோப்சி' சோதனையில் அவனது நுரையீரலில் இருந்த கட்டி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாத ஒன்று என உறுதி செய்யப்பட்டது.

முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால், விரைவில் மீண்டு விடலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை மேற்கொண்டான். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்ற போதும், முதலிரண்டு போட்டிகளில் சோபிக்க முடியவில்லை. இதன் காரணமாக மூன்றாவது டெஸ்டில் நீக்கப்பட்டான்.

இது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்படமாட்டான் என்பதை உணர்த்தியது. இது தான் இவனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகவும் சோகமான நாளாக அமைந்தது. அடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளான்.

இவ்வாறு ஷப்னம் சிங் கூறினார்.

0 comments:

Post a Comment